Friday 27 October 2017

ஜாதிக்காய் பிஞ்செனக் காமம்
.............................................................
மயிலின் முன்கழுத்தென நீலமேறி 
வளைந்து ஓடும் ஓடையென வெட்கம் 
முத்தம் விலக்க மறுகுகிறது

நீரின் நிழல் அருந்தும்

தவளைக்குஞ்சின்
வயிற்றில் கண்ணாடி வளையல்
சுழல்வதென உடலுக்குள் ஆசை
சூல் கொள்கிறது

காட்டுப்புறாவின் மேனியில் 

விளையும் 
கந்தகப் பொன்பச்சை நிறத்தை
உருகுமென் கண்கள் அணிகின்றன

காலின் பெருவிரல் 

அருகில் இருக்கும் சிறுவிரலை 
உரசிக் கொளுத்தும் தீ
மூளையில் மேகமென விரைகிறது

நீ அருகில் வருகையில்

காந்த மலையின்
சுனையின் சுற்றுச் சூழலில்
காற்றின் கலவரம் 
என்னைத் தொலைக்கிறது

ஜாதிக்காய் பிஞ்சென காமம் காய்க்கையில்

நாற்பது விரல்களில் 
நாயனச் சூத்திரமும்
காந்தள் இதழ் சுவைக்க
கசியும் நன்னீர் ஊற்றும் நம்மை
கற்பகக் காடாய்ப் படைக்கிறது

உனது

கற்கடகக் கைகளில் 
வெளிமானெனத் துள்ளும் 
உடலுக்குள் உருகும் மனதில்
முத்த நரம்புகள் பூக்கத் துவங்குவதை ரசிக்கிறாய்

ஊறும் உன் அணுக்கள்

நெத்திலிகளாய் நீச்சலடிப்பதையும் 
உனது உதடுகள் பறக்கும் அணிலென
எனது ஸ்தனங்களில் இடறத் துடிப்பதையும் 
பொன்துகள்களாய் செவிப்பறையில் பூசுகிறாய்

புருவ மத்தியில் இழந்த

புத்தியின் கொடியில் 
பூனைக்காலிப் பூக்கள்
பூத்துக் கறுக்கத் துவங்கிவிட்டன
கால்கள் சர்ப்பங்களாகையில்
காமம் களவென விளைந்த கனவுகளை வெல்கின்றன

வெள்ளி நிலவின் உட்கருவில்

பனி ஊறுகையில்
தாகத்தின் நிறம் வெள்ளை எனவும்
தாமரையில் சுடரும் ஒளி 
உயிரின் தண்டில் ஊடுருவுவதையும்
உன்னிடம் எப்படிச் சொல்வேன்

- Thenmozhi Das
10.5.2016


மூடுபனியின் நீர்ச்சால்கள்

காற்றின் வரையறைகளை கண்டுணரும் மலைவாசிக்கு யானைகளின் லத்திகள் காட்டு வழிகளின் இரகசியங்கள் யாருமற்ற போது அடி வயிற்றிலிருந்து எ...