Sunday 3 June 2018

நன்றேது? தீதேது? தொகுப்பிலிருந்து - நேர்காணல் - அகரமுதல்வன்



இந்தக் கவிதை வாழ்விற்குப் பின்னே உங்களுக்கொரு வசந்த வாழ்வு இருக்குமல்லவா?

கவிதை வாழ்விற்குப் பின்னே எனில் எனது மறைவிற்கு பின்னே என்று தான் சொல்ல முடியும். கட்டாயம்       அது ஒரு வசந்த நித்திய வாழ்வாக இருக்க வேண்டும் என்ற பயணமே இக்கவிதை வாழ்வு. வாழ்ந்துகொண்டிருக்கும் போது கவிஞனுக்கு வசந்த வாழ்வு உண்டா எனில் அது கேள்விக்குறி தான்.   மணல்  தொடங்கி நட்சத்திரங்களின் கீற்று வரை யாவும் வரையறுக்கத்தக்கதும் வரையமுடிந்ததுமாய் இருக்கிறது. வாழ்வு தவிர பேசிக்கொண்டிருக்கும் போதும் மெளனமாய் இருக்கிறேன் என அறிந்தவர் யாருமில்லை. மாற்றம் வருமெனக் காத்திருப்பதும் மாற்றத்தை உண்டுபண்ணிக் கொள்வதும் வீண் என நினைக்கிறேன்.

வாழ்வை அன்பினால் போர்த்துகிற வேட்கையை உங்கள் கவிதைகளில் அதிகமாக காணமுடிகிறது. அன்பிற்கும் அநாதரவுக்கும் இடையே உங்கள் குரல் தொங்கிக் கொண்டிருக்கிறதா ?

உண்மை.  எனது பால்யகாலம் ஒரு பெரு அமைதிமிக்க மலைவாசஸ்தலம். முழுக்க முழுக்க காட்டு வாழ்க்கை. இசையாலும் அன்பாலும் போர்த்தப்பட்ட நிறைவின் பெருவெளி. அன்பே பிரதானமாகக் கருதப்பட்டு படிப்பிக்கப்பட்டது . இசை பிராத்தனை உழைப்பு இவை மட்டும் தான் பெற்றோரால் அறிமுகப்படுத்தப்பட்டன . மிகுந்த கவனமுடன் "உறவினர்களை அறிமுகப்படுத்துதல் " கூட தாயிடமிருந்து விலக்கப்பட்ட கனிகளாக இருந்தன .ஆலயம் செல்வது பிரார்த்தனை செய்வது பாடல் இயற்றி பாடுவது ஒரு நாளில் ஒரு பத்து பாடல்களாவது வீட்டில் பாடவேண்டும் என்பதெல்லாம் அம்மாவின் நிர்பந்தம். எனில் அப்பா கம்யூனிஸ கொள்கைகளில் மிகவும் ஆழ்ந்த பிடிப்பு மிக்கவராக இருந்தார்.
வீட்டில் தெய்வப் படங்கள் வைப்பதை உருவ வழிபாட்டை அப்பா கடுமையாக கண்டித்தார். வீட்டின் சுவர்களை லெனின்,காரல் மார்க்ஸ் ,ஏங்கல்ஸ் மற்றும் பிரபாகரன் படங்கள் மட்டும் தான் வைக்க அப்பாவிடமிருந்து அனுமதி இருந்தது. பெரிய பெரிய அளவில் சிவப்பு கடின அட்டை கொண்ட தேசத்தலைவர்களின் புத்தகங்கள் அனைத்தும் அப்பா வைத்திருந்தார். திருவிழா அரசு விடுமுறை நாட்கள் ஏன் கிறிஸ்துமஸ் இவற்றிக்கு அம்மா ஆடைகள் பரிசளித்தால் மே 1 க்கு அப்பா சிவப்புப் பாவாடையும் வெள்ளைச் சட்டையும் வாங்கித் தருவார். அதோடு மட்டுமல்ல காரல் மார்க்ஸின் வரிகளை மேடையில் என்னைப் பேசவைக்கப் போராடுவார்.
என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு தினத்தை என் அப்பா உருவாக்கினார் . எனக்கு 6 வயது "உலகம் என்னிடமிருந்து தான் தோன்ற வேண்டும் - என் இதயத்தில் அது வேரூன்ற வேண்டும் - என் இரத்தத்தில் அது ஊற்றெடுக்க வேண்டும் என் ஆன்மாவின் மூச்சில் அது வசிக்க வேண்டும் " என்ற மார்க்ஸின் இக்கவிதை தான் எனக்கு அறிமுகமான முதல் கவிதை.
அப்பாவின் மார்பில் அமர்ந்தபடி உயர்ந்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தேன் அன்றிரவு . மறுநாள் மலை வெளியில் நாங்கள் மேடை நோக்கி பயணம் செய்த போது வெளியெங்கும் "தோட்டத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்" என்ற வாக்கியம் பாதைகளில் எல்லாம் இருப்பதை கவனித்தேன். என் கையில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் இட்ட சிவப்பு வெள்ளைக் கொடி இருந்தது. அப்போது அப்பாவிடம் "அப்பா ஏன் சிவப்பு பாவடையும் வெள்ளை சட்டையுமே எடுத்து தாரீங்க இந்தக் கொடிலயும் அதுதான் இருக்கு" என்றேன். அதற்கு அப்பா " அது உயிரின் நிறம். உண்மையின் நிறம். அது போராட்டத்தின் நிறம் . சிவப்பணுக்களும் வெள்ளையணுக்களும் நம் உடலின் உள்ளே போராடும் வரை தான் வாழ்க்கை. அது போராட்டத்தை நிறுத்தும் போது தான் நமக்கு மரணம் சம்பவிக்கும். போராட்டம் உடலிலும் புரட்சி என்பது மனதிலும் இயற்கையாகவே இருக்கிறது நாம் தான் போராட மறுக்கிறோம் . ஜாதி மதம் கீழ்தட்டு மேல்தட்டு இதெல்லாம் கூத்தாடிகள் குளிர்காயும் விறகு. உழைப்பதும் உண்மைக்காக போராடுவதும் மட்டும் தான் சரியான வாழ்வு" என்றார்.
என் ஆழ்மனதின் ஆணிவேர் இதுதான் என் தந்தையின் வார்த்தைகள் தான். என்றென்றைக்குமான வாழ்வு. தாய் அர்ப்பணித்து அன்பும் தந்தை அர்ப்பணித்த போராட்ட குணமும் தான் அன்பிற்கும் அநாதரவிற்குமான குரலாக என்னுள் கிடக்கிறது .
அதனால் தான் அன்பிற்கென நடப்பதே இவ்வுலகில் வலிமையானபோராட்டம் என எழுத வாய்த்தது.

திரைப்படத்துறையில் இயக்குநர் பாரதிராஜா அவர்களோடு பணியாற்றினீர்கள் . பின்னர் அத்துறையில் இருந்து முற்றாக நீங்கிவிட்டீர்களே ஏன் ?

 எனக்கு இரண்டு துறைகளில் அனுபவமுண்டு . இரண்டுமே எனக்குள் திணிக்கப்பட்டது என்பது தான் உண்மை . மருத்துவத் துறையை எனக்கு தேர்வு செய்து வழிநடத்தியது எனது அப்பா. இதிலிருந்து ஓரே நாளில் திரைப்படத் துறையில் என்னை எடுத்துச் சென்றது இயக்குநர் பாரதிராஜா. இரண்டுமே என் மனதிற்கு பிடித்தவைஅல்ல. நிர்பந்திக்கப்பட்டவை.
ஆனால் கட்டாயம் தெரியும் எனது விதி கவிதை தான். காரணம் சிறு வயதில் யார் கேட்டாலும் நான் கவிஞராவேன் ." நான் கவிஞர்" என்று சொல்வதுண்டு.                       ஒரு நாள் அப்பா சொன்னார் "Art it's a Extracurricular activity" கலையே வாழ்க்கையில் வேண்டும் எனில் நீ வாழ்வையே அர்ப்பணிக்க வேண்டியிருக்கும். நீ அதற்கு உன்னை தயார் செய்வாயா" என்று கேட்டார். செய்வேன் நான் கவிஞராவேன் என்றேன் அப்போது எனக்கு வயது 5 . எனக்குள் கவிதைகள் அதற்கு முன்னமே ஊற்றெடுத்திருக்க வேண்டும். அப்படித்தான் நம்புகிறேன். ஏன் எனில் எனக்குள் கவிதை என்பதற்காக விதை எங்கிருந்து வந்தது. விதைத்தது யார் எனத் தெரியவில்லை. இன்றளவும் கேள்வி தான் எனக்கு அது. ஆனால் எனக்குள் பெருகும் அதை எனது அப்பா கண்டுபிடித்தார் .
காட்டுவழி விறகெடுக்கப் போகையில் காட்டு ஆரஞ்சுப் பழம் அப்பா பறித்து தந்தார். அதன் தொலியை அழுத்தி உரிக்கையில் சாரல் போல் தெரிந்தது தண்ணீர் . நான் அப்பாவிடம் "அப்பா ஆரஞ்சுப் பழத்தில மழை எப்படி ஒளிஞ்சிருக்கு" என்று கேட்டேன் மக்களே நீ என்ன கேட்ட என்று சொல்லி விட்டு சும்மாடு கத்தி எல்லாம் கீழே போட்டுவிட்டு அந்தக் காட்டுவழியில் என்னை தலைக்கு மேலே தூக்கி கணக்கற்ற முத்தமிட்டார். "நீ கவிதை சொல்லிவிட்டாய் . உனக்கு எழுத்துகளை காட்டவேண்டியது என் கடமை " என்றார்
அன்றிலிருந்து என் அப்பாவின் நாட்குறிப்புகள் எனது கவிதைக் கேள்விகளால் நிறப்பப்பட்டன . நான் சமதளத்திற்கு பயணிக்கும் வரை - நான் வாய்வழியாகச் சொல்வதெல்லாம் அப்பா எழுதி பத்திரப்படுத்தினார் . முதல் கவிதை தொகுப்பின் பின் பாதியில் சில பதிவாக்கப்பட்டன . அவற்றை பதிவாக்க வேண்டும் என விரும்பியது நான் மற்றுமொரு தந்தையாக ஏற்றுக்கொண்ட கவிஞர் அறிவுமதி அப்பா.

சினிமாவில்- திரையில் பெண், திரைக்குப் பின்னால் பெண் கசப்பான அனுபவங்கள் நிறைந்து கிடக்கிறது. அப்படி ஏதும் உங்களுக்கு இருக்கிறதா?
திரையில் காட்டப்படும் பெண் அலங்கரிக்கப்பட்ட கசப்பு. திரைக்குப் பின்னால் பெண் கொன்று புதைக்கப்பட்ட கசப்பு.

உங்களின் கவிதைகளில் தொடர்ந்து வருகிற தவிப்பின் குரலுக்கு யார் தான் சொந்தமானவர்கள் ?

கவிதையை கவிதையாக புரிந்து கொள்ளும் வல்லமை பெற்றவர்கள் அறிவார்கள்.


உங்கள் கவிதைகள் தமிழகத்தில் எழுதப்படும் பெண் கவிஞர்களின் கவிதைகளிலிருந்து உட்பொருள் தொடக்கம் சொல்லும் பாணி வரை தனித்துவதன்மை கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களிடமுள்ள தீவிரமும் ஓர்மமும் அரசியல் ரீதியாக உங்களிடம் தவறிவிடுகிறதே ?

மற்ற பெண்கவிஞர்களிடம் இருக்கும் தீவிரமும் ஓர்மமும் அரசியல் ரீதியாக உங்களிடம் தவறிவிடுகிறதே    இந்தக் கேள்விக்கு ஒரு விரிவான பதிலை கவிதைகள் மேல் தீவிர அக்கறை கொண்ட நான் சொல்லியாகவேண்டும் . அதுவே எனது உட்பொருள் தொடக்கம் சொல்லும் பாணி வரை தனித்துவதன்மை கொண்டிருக்கிறக்கக் காரணமாகவும் இருக்கிறது.
உடல் மொழிக் கவிதைகள் அரசியல் கவிதைகள் பெண்ணியம் பெண் சுதந்திரம் பெண் விடுதலை ஜாதி ரீதியாக கவிதைகள்
இவற்றை தீவிர குரலாக பதிவு செய்ய வேண்டிய ஒரு காலகட்டம் இருந்தது நான் மறுக்கவில்லை. 1996 இல் இருந்து சிறுபத்திரிக்கை வழியாக எனது கவிதைகள் பிரசுரம் பெற்றன. அக்காலத்தில் இருந்தே என் மனச்சிந்தனை நடப்பு காலத்தை பற்றி மாத்திரம் அல்லாமல் எக்காலத்துக்குமான கவிதைகளைப் படைத்தல் பற்றியதாக இருந்தது.
மட்டுமல்ல உடல்மொழிக் கவிதைகளின் அரசியல் அவற்றை அப்பட்டமாக எழுத மனம் இடம் தரவில்லை என்பது உண்மை. ஒரு ஆபாசத் தன்மையற்று எதையும் படைத்தல் என்பது தான் கலைகளில் ஆகச்சிறந்த நுண்மை . இயற்கை இதைத் தான் போதிக்கிறது. பிரபஞ்சத்தில் "படைப்பு" என்பதை தேடலோடு பயணித்தால் எல்லாம் வெறுமையின் உட்கருவில் தனிமை பிரசவித்த அணுக்களில் இருந்து துவங்குகிறது. அப்படி எனில் வெறுமை வெளியில் மெளனங்களைப் உயிர்ப்பித்தல் படைத்தலாக இருக்கிறது. இதை உணர்ந்து கொண்ட நான் மெளனங்களைப் படைக்கவே போராடினேன் .தர்க்கம் எனக்குள்ளேயே தகர்க்கப்பட்டது.
மெளனம் வெளிப்படுத்தும் சலனம் எல்லா அரசியலையும் எதிர்கொள்ளப் போதுமான ஆயுதம் . எனது கண்ணில் எதுவும் நிர்வாணமாக இல்லை. மரங்களுக்கு அதன் பட்டைகள் தான் ஆடைகள் என என் மனம் சொல்லுகிறது . இன்னும் கூட சற்று விரிவுபடுத்திச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் சிற்பக்கலையை கூர்ந்து கவனித்தோமானால் அதில் வடிக்கப்பட்டிக்கும் காமம் உலகச் சிற்பக் கலையின் உச்சம். சிலைகள் வார்த்தையற்றது ஆதலால் காணும் கண்கள் அதனை மிகச் சாதாரணமாக கடந்து விடுகின்றன . கலைகளில் நுணுக்கம் மிக்கவனும் ஆர்வம் கொண்டவனும் சிலைமொழி வழியாக அது சொல்லாத வார்த்தைகளோடு உறவாடிக் கொள்கிறான். இங்கே மெளனம் கலையாகிறது. ஆனால் ஒரு கவிஞனுக்கு மொழியே படைப்பின் ஆயுதம். சொல்லை வைத்து உணர்வுகளை உயிர்பிக்க வேண்டிய நெருக்கடி அதனால் அதைக் கையாள்வது மிகக் கடினமான சவால்.
இப்படி இருக்க அதிர்ச்சி அளிக்கும் உடல்மொழிக் கவிதைகள் எனக்கு உடன்பாடு இல்லைவே இல்லை . அதனை ஒரு சிலையின் மெளன இயல்பில் சருகின் நித்திய மாயையில் கடத்த முயற்சித்தேன். இந்த இடத்தில் தான் எல்லா உடல்மொழிக் கவிதைகளையும் அரசியலையும் ஆண் ஆதிக்க வக்கிரங்களையும் இரகசியமாக மெளனத்தில் மிதக்க விடுவதை படைப்பாக கண்டடைந்தேன்.
"எனது மனம் இரகசியமாய் பிடுங்கப்பட்டு ஒரு ரோஜா இதழைப் போல் உண்ணப்பட்டது" இந்த வரிகளுக்குள் சிதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடலை மனதை வாழ்வை நீங்கள் காணாமல் இருக்க முடியாது . ஆனால் அதைச் சொல்ல நான் அதிர்ச்சி தரும் எவ்வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை .
அதே போல் ஒரு உன்னத கவிதை வெளிப்படையாக அரசியலை உடலை காமத்தை சொல்வது அல்ல . எழுதப்பட்ட வார்த்தைக்குள் எழுதப்படாத உணர்வை ஒளித்து வைத்து வாசகனின் ஆழ்மனதோடு உயிரைத் தரிசிக்கத் செய்வது.

 நீங்கள் ஆபாசமானதை எழுதவேண்டாம் என எண்ணம் கொண்டிருப்பதாக  சொல்லுகிறீர்கள். உடலரசியல் கவிதைகள் ஆபாசமானவையா என்ன?

ஆபாசமானவைகளை எழுத எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை .  பொதுவாக
உடலரசியல் கவிதைகள்  ஆபாசமானவை அல்ல.
நமது இலக்கிய சூழலில் ஆபாசமற்ற உடல் அரசியல் கவிதைகள்  சில  இருக்கத்தான் செய்கின்றன.   ஆனால்  ஆபாசமாக  எழுதக்கூடாது என்பதில் எனக்கு உறுதி இருக்கிறது.


உங்கள் கவிதைகள் அதிக கவனம் பெறவில்லை என்கிற கவலை உங்களுக்கில்லையா?

இல்லை . காரணம் புறக்கணித்து ஒதுக்குவதால் கவிதைகள் மேல் நான் கொண்டுள்ள அன்பு மென்மேலும் வலுவடைகிறது.  மனிதர்களை நம்பாமல் கவிதைகளையே நம்புவதால் எனது உண்மையும் எளிமையும் தனக்கான பாதையில் தனக்கான வெளிச்சத்தில் காட்சி தரும் . இயற்கையாக எதைப்  புறக்கணிக்கிறோமோ அதுவே வலிமை பெற்றதாகும் .  நிராகரிக்கப்படுகிறவைகள் தோற்றுப் போன வரலாறு எங்கும் இல்லை

மேலும் இலக்கியச் சூழல் என்பது சூனியக்காரர்களின் கைத்தடியைப் போல  அதிர்ச்சி தருகிறது. உண்மையில் உள்ளார்ந்த கலை ஆர்வம், அர்ப்பணிப்பு , தேடல் உள்ளவர்கள் மிகக் குறைவு என்றே உணர்கிறேன். திரைப்பட துறைக்கும் இலக்கிய உலகுக்கும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன.

அங்கே உண்மை கலைஞர்களை பொதுமக்கள் வெகுவாக புரிந்து கொள்கிறார்கள் சிறந்த படைப்பாளிக்கான கவனம் அங்கீகாரம் என்பது நிச்சயம்  . இலக்கியத்தில் உண்மையாக இயங்குபவர்களை விட போலியான பிரதிகளுக்கான கவனம் விரைவாகக் கிடைக்கிறது.  அல்லது உருவாக்கி கொள்கிறார்கள் . நடிக்கிறார்கள்.நமக்கு இங்கே சரியான மதிப்பீட்டாளர்கள் சீரிய விமர்சனங்கள் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவை . இவர்கள்  யாதொரு குழு அரசியலிலும் பத்திரிகை அரசியலிலும்  சிக்காமல் இருக்க வேண்டும் என்பது  மிக முக்கியம்.

1996 முதல் பிரசுரமான கவிதைகள் 2001 ல் முதல் தொகுப்பு வெளிவரும் முன்னமே மிகுந்த கவனம் பெற்றது. அதிகமாக சுஜாதா அவர்கள் என்னிடம் விரும்பி கவிதைகள் பெற்று மின்னம்பலம் இணைய இதழில் பிரசுரித்தார் . பின்னர் 2001 ல் வெளியான முதல் தொகுப்பிற்கு அபாரமான வரவேற்பு. முதல் தொகுப்பு 3 விருதுகள் பெற்றது.

ஆனால் அதன் பின்னர் நான் திரைப்படத்துறையில் அதிக வேலைப்பளுவில் சிக்கினேன் . அங்கும் எனது எழுத்து அதிகம் ஆனாலும் கவிதைகள் என்னை விடுவதாய் இல்லை.  நான் மேலும் தீவிரமாக எனது மொழியின் தீவிரத்தை செதுக்கத் துவங்கினேன் பெரும்பாலான கவிதைகள் இரவு நேரங்களில் எழுதுவேன். அல்லது இரவு முழுவதும் எழுதிக்கொண்டேயிருப்பேன் . இப்படி விடாமுயற்சி என் கவிதையின் வடிவங்களில் நேர்த்தியையும் செறிவையும் கூட்டித் தந்தன.  ஒளியறியாக் காட்டுக்குள் தொகுப்பில் திணையின் பெரும் பாய்ச்சலை பல  அநேக புதிய உத்திகளை வித்தியாசமான புதிய வடிவ முயற்சிகளைத் செய்தேன். அதன் பின்னர் நிராசைகளின் ஆதித்தாய் ஆகப்பெரும் வித்தியாசமான கவிதை முயற்சி அத்தனையும் ஆழ்மனக் கவிதைகள் .

இக்கவிதைகளை கவனிக்க காலம் ஆனது என்று சொல்ல முடியாது. தொடர்து அத்தனை இலக்கிய பெண்வெளி அவதானிப்பு பற்றிய கட்டுரைகளிலும் கவனமாக என் பெயர் துண்டிக்கப்பட்டது. அல்லது பேசப்படவில்லை. இதற்கு காரணம் எனது கவிதைகள் உடல்மொழி பெண்ணியம்,பெண்விடுதலை எனப்பேசாமல் பால் பாகுபாடு பிரித்தறிய இயலா பொதுவெளியில் நிலத்தையும் இயற்கையையும் பேசியது.  இவைகளை ஏற்றுக் கொள்ள கால  தாமதம் ஏற்படலாம். ஆனால்  எக்காலத்திலும்  எனது கவிதைகள் காலாவதியாகாது .  இனிவரும் காலங்களில்  எனது கவிதைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால் இலக்கியத்தில் ஏன் எனது கவிதைகள் புறக்கணிப்புக்கு உள்ளானது என்ற அரசியலை புரிந்து கொள்ளலாம் .
தமிழுக்கு இணையாக வேறு மொழி இல்லை எனில் நமது மொழியின் அசாத்திய குரலை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் நமது.  இதன் உள்ளே நாம் பேசவேண்டியது கவிதையே .எனது கவிதைகளை இனியும் இலக்கிய சூழல் நிராகரித்தால் இழப்பு எனக்கு அல்ல.
பொதுவான வடிவ பாணியில் இருந்து பெரிய வித்தியாசத்தில் எனது கவிதைகள் இயங்குவது ஒரு காரணமாக இருக்கும்.  வீரியம் கொண்ட எதுவும் வீழாது வாழும்.

உங்களைக் கவிக்கடவுள் என எழுத்தாளர் சாரு நிவேதிதா வியந்து பாராட்டினாரே,அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் 

ஒரு மூத்த நல்ல எழுத்தாளரின் பாராட்டு மகிழ்ச்சி  அளித்தது . அதற்கு மரியாதையும் நன்றியும் நினைத்துக் கொண்டேன் . பாராட்டுகள் எப்போதும்  உத்வேகத்தையும், நல்விமர்சனம் மற்றும் எதிர் விமர்சனமும் கூட வளர்ச்சிக்கு வழியை வகுத்து தரும் என்று  அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.


தமிழ்கவிதைகளில் நிலம் பற்றிய பிரக்ஞை அதிகம் உங்கள் கவிதைகளில் தானிருக்கிறதென எண்ணுகிறேன்.நீங்கள் நிலத்தின் அத்தனை அற்புதங்களையும் எவ்வாறு தரிசிக்கிறீர்கள்?


ஊற்றின் கண் ஊற்று அறியாது .ஆயினும் இக்கேள்விக்கான  பதில் நீட்சிமிக்கது. எனது பால்ய காலம் மலைவாசஸ்தலம் ஆகையால் மலையும் மலை சார்ந்த நிலமும். காடும் காடு சார்ந்த அனைத்தும் என் எழுத்தின் அஸ்திவாரங்கள் ஆகின . நான் கண்டும் கேட்டும் தேடியும் பழகிய காடு என் உறக்கத்தையும் தகர்க்கத் துவங்கியது . அம்மலைப்பிரதேசம் அதன் வெள்ளந்தி மன மக்கள் தான் இன்னும் என் அழியாச் சொத்து. அம் மலைகளுக்குள் யாதொரு கடையோ கடைத்தெருவோ சினிமா கூடமோ சந்தை சண்டை சச்சரவுகளோ எதுவுமற்ற இயற்கையின் பேரெழில் பெரும் பரப்பில் நான் கண்ட ஈரங்களை பூக்களை மிருகங்களை தாவரங்களை என  அனைத்தும் நான் நேசிக்கத்துவங்கினேன் .
எனது மரணமே நிகழக்கூடாது "ஏதேனும் ஒரு மரங்களின் சதைக்குள் விரலையும் மனதையும் ஒளித்து வைக்க முடியும் எனில் நலமாயிருக்கும்"  என  எழுதியதன் காரணம் இவ் இயற்கையை எழுதித்தீர்க்க முடியாத அவஸ்தையில் தான்.

யாரேனும் எனது பிறந்த  ஊர் பற்றிக் கேட்டால் முகவரி சொன்னாலும் புரியாத  இந்திய தேசத்தில் எனது நாட்டின்  ஒரு கடைக்கோடி மலை உச்சியில் ஒரு ஊற்று போல் கிடக்கும் நான் பிறந்த மண்.  இதன் எழில் என்னை வெகுவாய் புரட்டி எடுத்தது. மேகமலை என்றே பெயர் வரக் காரணமாய் மேகங்கள்  நடக்கும் அதிசய நிலத்தை நான் பதிவு செய்யாமல் எப்படி மறைவது.

25 வயது வரை கடலும் சமவெளி வாழ்வும் அறியாத  எனக்கு குறிஞ்சியும் முல்லையும் முழுதாய் சிலாகித்து எழுத வாய்த்தது . ஆனால் யாதொரு பாசாங்குமின்றி தமிழின் உச்ச இசைத் தன்மையில் யாதொரு அந்நிய மொழியின் வடிவத் தாக்கமின்றி எனது மொழியை எழுத வேண்டும் என்பது எனது தாகமும் தீர்க்கமும் ஆகும்.
நமது நிலம் பற்றியும் அதில் வாழும் மனித மனங்களின் வேதனைகள் பற்றியும் எழுத எனக்கு உள்ளார்ந்த பிரியம் உண்டு.  நானாய் தேடிச்செல்வது இயற்கையின் ஊடே மொழியைத் தான்.

நீருக்கு மணமும் நிழலும் கிடையாது என  ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் மைக்கேல் மாமா சொன்னார். ஒரு நாள் காட்டுவழி செல்லும் போது மெல்லிய நீரோடை கூழாங்கற்களின் தெளிவின் மேல் ஓடிக்கொண்டிருந்தது .அதனடியில் திருகித் திருகி ஓடை ஓடும் போது நீரின் நிழலை நான் கண்டேன். பரவசம் தாங்க முடியவில்லை. மலைவெளிகளில் நான் இயற்கையின் அதிசயங்கள் கண் மகிழ்ந்து உருண்டது உண்டு.

அப்படி ஒரு நாள்

"நீருக்கும் நிழலுண்டு என்பது
சிற்றோடை பேசிப்போகையில் தான் தெரிந்தது"
என மிகச் சிறிய வயதில் சொன்னேன்.

இப்படி எனக்குள் எல்லையற்ற காட்சிப்படிமங்களை விதைத்தது காடுகள் தான். இதுவரை யாதொரு  இலக்கிய தீவிர வாசிப்பும் இல்லாத எனக்கு இம்மலைவாழ்வு தான் பேரகராதியாய் இருக்கிறது.  அதனை எனது மொழியில் எழுதுகிறேன்

உங்களின் பால்யகாலத்தின் நினைவுகளில் மறக்கமுடியாத தருணங்கள்?

அதிகமாய் இருக்கின்றன . எனது மூளை ஒரு  அசாத்திய தன்மை கொண்டது எளிதில் எதையும் மறக்காமல் காட்சிப்படுத்தும் அது . பால்ய காலம் பற்றி கதையாக எழுத விருப்பம் உள்ளது


திரைப்படவுலகில் பெண்ணுக்கு நிறைய சவால்கள். உங்களுக்கு  திரைப்படம் ஏதேனும் திட்டம் உள்ளதா?

திரைப்படம் கட்டாயம் நான் இயக்குவேன். அதற்கான காலம் கொஞ்சம் தூரத்தில் உள்ளது.  ஆனால் கவிதை தான்  அதைவிடச் சிறந்த கலை. இயக்க  இயலாத காட்சிகளை கவிதைகளில் காட்சிப்படுத்தும் சாத்தியம் அதிகம் இருக்கையில் கவிதைகள் ஒரு உத்வேகத்தை எப்போதும்  தருகின்றன. ஒரு முழுத் திரைக்கதையையும் அநேக சிறுகதைகளையும் நாவலையும் கவிதைக்குள் அடைத்துவிடம் சாத்தியம் இருக்கையில்  கவிதை எழுதுதல் படைப்பின் திருப்தி இயற்றுதல் கலையில் சிறந்தது எனில் கவிதை இயற்றுதல் கலைகள்  அத்தனைக்கும் மூலாதாரம்.

எனது பாத்திரம் வெறுமையோடே இருக்கிறது . நிறைக்கவும் நிறையவும்
வாழ்வு முழுமையும் கவிதைகள் போதுமானது. பூச்சக்கரத்தின் மேலும் கீழும் காண்பதையும் காணயியலாததையும் சொல்லினால் கண்டடைய முடிகிற போது உயிருக்குள் மொழி தான் முதல் கலை. அதை விட்டு நான் ஏன் கீழிறங்க வேண்டும்.


நேர்காணல்  - அகரமுதல்வன்
                 நன்றேது? தீதேது? தொகுப்பிலிருந்து 

Saturday 10 February 2018


நீலத் தீ
======
ஒரு பூதத்தின் தலையில் நின்றபடி
இரண்டு பூதங்கள் எரிவதைப் பார்க்கிறேன்

மேலொரு பூதம்
தன் மார்பில் ஊறும்
மற்றொரு பூதத்தை மிதக்கவிடுகிறது

எல்லாம் ஒழுங்கின்மையின் பச்சைத் சுடர்

நான் படைத்த ஆறாவது பூதம்
உயிர் பெற்று விட்டது

அகம் அழிவின்மையின் நீலத் தீ

உயிர் மெய்
மெய் கருப்பு

உடல் பச்சை
சதை செம்மண்

எனது ஆயுதம்
த எனத் தகிக்கும் மொழி

அழித்தல் இயலாமை

- தேன்மொழி தாஸ்

19.11.2016
05.32pm


லதா
--------
கின்னரக் காட்டின்
கரை வழியே
நடந்து போகிறேன்

துத்தி மரத்து இலைகள்
துணை பதைக்க
உதிர்ந்தவாறே இருக்கின்றன

மலையின் மெல்லிய இசைகளைச்
சேகரித்துக்கொண்டே
அந்த ஓடை பாடி வருகிறது

கரையில் அடர்ந்திருக்கும்
உண்ணிப் புதர்தான் மெளனத்திற்கெனப் பாடிய
உன்னதமான பாடலாய் இருக்க முடியும்

தாலம் அசைத்தபடி வரும் யானையும்
தாடை துடைத்தபடி வரும் மானும்
தாகிக்கையில்
லதா
குளிராய் அவைகளுக்குள் சென்றிருக்கக் கூடும்

அந்தப் பனிநீர் ஊற்றருகே குனிந்து
லதா அக்கா என்கிறேன்

பாடலை நிறுத்துகிறாள்
அவள் விரல்கள் தான்
மெல்லிசையென உணர்கிறேன்

என்னை அணைத்துக்கொள்ள
அவள் சீதளமாவது புரியும் போது
கண்ணீரோடு அள்ளி முகத்தில் ஊற்றி
உதடு துடிக்க
அவள் முத்தங்களைக் குடிக்கிறேன்

"எப்படி இருக்கிறாய்"
என்றெல்லாம் கேட்கவே முடியாது

ஏனெனில்
வெத்தலை தின்னாம் பாறைக் காட்டருகே
இன்னும் ஊறி வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறாள்
லதா

Composed by - Thenmozi Das
5.1.2004

#ஒளியறியாக் காட்டுக்குள்



Friday 9 February 2018

நூற்றாண்டின் கவிஞர்  #தேன்மொழி_தாஸ் - அவர்களின்  "#காயா"
------------------------------------------------------    
#மிஸ்பாஹுல்ஹக்

             கவிதையின் பணி எது என கேட்டால் இன்னது என குறித்த ஒரு பதிலை வரையறுக்க முடியாது. ஒவ்வொரு கவிதையும் எதை செய்ய நாடுகிறதோ அதுவே அதன் அடைவாக இருக்கலாம். கவிதைக்கென வரைமுறைகளையும் நியதிகளையும் வைத்துக்கொண்டு எழுத முனைபவர்கள் வெறும் சிதறிய வார்த்தைக் கோர்வையோடு எழுத முனைந்ததை முடித்துக் கொள்ள நேரிடலாம்.
ஒவ்வொரு கவிஞனும் அவன் கவிதைகளின் பேசுபொருளை அவன் தளத்தில்இருந்து பாடிக்கொண்டிருக்கிறான். இயற்கையை, வாழ்வியலை, சமூகத்தை, அதன் அவலங்களை, உணர்வுகளை, தன் புனைவுகளை, கவிதை நிகழ்வுகளை இப்படி ஆயிரமாயிரம் விதங்களில் கவிதைகள் எழுதப்பட்டு கொண்டே இருக்கின்றன. அவை வாசகனிடம் எத்தகைய உணர்வெழிச்சியை தூண்டுகின்றன என்பது வாசகனின் மனவோட்டத்தை பொறுத்திருக்கிறது என்பதைப்போலவே கவிஞன் எத்தகு உணர்ச்சியின் ஆழத்துல் இருந்து எழுதினானோ அந்த உணர்வும் நிச்சயம் வார்த்தகளின் வழியே காவிச்செல்லும் சக்தியை கவிதை பெற்றிருக்கிறது
Thenmozhi Das இன் இறுதியாக வெளிவந்த அவரின் "காயா" தொகுதியை மெல்ல கடினப்பட்டு உள்வாங்கி வாசித்து முடித்த பின் அந்த பிரதி குறித்து ஒரு வாசகனாக என் உணர்வுகளை குறித்து வைக்க நினைக்கிறேன்.
நம் புலன்களால் உணர்கிற புற உலகை அல்லது அதன் நிகழ்வுகளை கவிதைக்குள் கவிஞன் வார்த்தெடுக்கும் போது, தன் இயல்பிலேயே கவிதை கொண்டிருக்கும் சுவாரஸ்யமும் ஈர்ப்பும் அதன் பேசுபொருளின் மீது நம் கவனத்தை திருப்பிவிட்டாலும் ஒரு நிகழ்வைப் போல கவிதையையும் கடந்துவிடுகிறோம். ஆனால் ஆத்மாவின் உணர்வுகளை, அதன் அதிர்வுகளை, உள்ளேயே நடக்கும் அதிசயங்களை, அந்த ஆத்மா அதன் ஆழத்தில் இருந்து கவிதையாக மொழிப்பெயர்க்கும் போது வாசகனின் ஆத்மாவையும் அதில் உறையச்செய்து அந்த ஆழத்தினுள்ளே அவனையும் இழுத்துக்கொண்டு சென்றுவிடுகிறது.
"காயா" அப்படி ஒரு ஆன்மாவின் மொழியாக, நமக்குள்ளும் அந்த அதிர்வை தந்தப்படியே நம்முள் ஊடுருவி படரந்துவிடுகிற கவிதைகளின் தொகுப்பு. இது புலன்களுக்கு அப்பாலான இன்னொன்றால் உணரப்படவேண்டியது. ஒவ்வொரு கவிதையையும் மீண்டும் மீண்டும் எத்துனை முறை வாசித்தாலும் ஒவ்வொருமுறையும் புதுவித ஆத்மார்த்த கிளர்ச்சியை தரக்கூடியவை. இந்த தொகுப்பின் எல்லாக் கவிதைகளுமே ஆச்சர்யமானவைகள் தான். ஒவ்வொன்றைப் பற்றியும் பேசுவதற்கு அனேக விஷயங்கள் செறிந்திருக்கின்றன..
சூனு என்கிற அவரது கவிதை....

"இரும்புக் கதவொன்றில்
உனது பிஞ்சுக் கை அசைந்து கொண்டேயிருக்கிறது
சூனு
யாரும் நம்புவதில்லை
எனக்குள் நீ வளர்வதை
வாழ்வதை
சோப்புக் கரைசலால் குமிழ் படைக்க
மூச்சுக் காற்றை ஊதுவதுபோல்
நீ கதவு திறப்பதை
அம்மா என அழைத்தபடி ஓடிவருவதை
பூக்களால் கன்னத்தில் ஒத்தடமிடுவதை
மணல்களை எனக்கான மாத்திரைகள் என்பதை
இரவை ஊஞ்சலாக்குவதை
எனது கண்களை தசமபாகமாக சிதறவிடுவதை
நித்திரைகளைப் புன்னகையாக்குவதை
நிலத்தின் ஆழத்தை எடுத்து
நீ எனக்குப் பொட்டு வைப்பதை
உனது அப்பாவின் பெயரை
ஆன்மாவின் தண்டில் எழுதுவதை
மனதிற்குள்ளும் நஞ்சுக்கொடி வழியாகத்தான்
உனக்கு உயிர் தருகிறேன் என்பதை
யாரும் நம்புவதில்லை சூனு"

"சூனு" என்பது மகன் /மகள் என்பதைக் குறிக்கிறது. தன் தாய்மை உணர்வுகளுக்குள்ளே ஒரு  மகனின்/மகளின் உணர்வுகள் மெல்ல வளர்த்துவருவதை, தனக்குள்ளே அந்த உணர்வு ரகசியமாய் மெல்ல வளர்வதை, அந்த விசித்திரமான உணர்வின் நிஜத்தை யாரும் நம்பப் போவிதில்லை என்பதை சூனு பேசிக்கொண்டிருக்கிறது. ”உனது அப்பாவின் பெயரைஆன்மாவின் தண்டில் எழுதுவதை " "மனதிற்குள்ளும் நஞ்சுக்கொடி வழியாகத்தான்உனக்கு உயிர் தருகிறேன் என்பதை" தன் பெண்மையின் இயல்பிலிருந்தே ஆணின் உணர்வை வளர்ப்பதும், அந்த உணர்வு தாய்மையால் எப்போதும் போஷிக்கப்படுவதையும் அந்த வார்த்தைகள் இன்னும் இன்னும் எதையோ பேசிக்கொண்டிருப்பதையும் உணரமுடிகிறது.

"சதாவரிக்கொடிகளின் வேர்களே
பெண்களின் மார்புகளைப் படைத்து
அதனுள்ளே இன்னும் ஓடிக்கிடக்கின்றன என்று
ஆழ்மனதின் நீலம் சொல்கிறது"

சதாவேரிக்கொடியையும் பெண் மார்பையும் ஒற்றை கவிதையில் இணைத்து விடும் இந்த கவிதை மனதின் ஞானத்தை என்ன சொல்வது.
"நீரிழிவைப் போக்கு நெடுநாட் சுரத்தையெலா
முரைவிடுத் தோட வுறுகுங்காண் நாரியரே
வெந்நீர் ரெய் சோமநோய் வேட்டை யறைற்றணிக்குந்
தண்ணீர் விட்டான் கிழங்குதான்"
என சதாவேரியைப்பற்றி பழய பாடல் இருக்கிறது. தாய்பால் சுரப்பை அதிகரிக்கவும், பெரும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமும், இன்னும் என்னற்ற மருத்துவ குணங்களால் மிகைத்த சதாவேரியின் வேர்கள் பெண் மார்புகளை படைத்திருந்தால் அதன் மகத்தான தன்மையும், அது சுரக்கும் தாய் பாலின் மகோன்னதத்தையும், அதன் வீரியத்தையும் அந்த ஒற்றை உவமையால் சொல்லவிடுகிறது இந்த ஞானத்தின் கவிதை.

"பூர்வகாலத்தில்
கலப்பைக்கிழங்கின் வடிவை
எழுத்துருவாக யாரேனும் நினைத்திருக்கலாம்"

நாம் எழுதும் எந்த மொழியினதும் எழுத்தக்களின் தோற்ற மூலத்தை நாம் அதிகம் யோசித்திருக்கும் சாத்தியம் மிக அரிது. எழுத்துக்கள் இல்லாத ஒரு ஆதியில், அது பற்றி பரங்ஞையில்லாத ஒரு ஆதியில், இயற்கையில் இருந்து ஞானத்தைப் பெற்ற மனிதனுக்கு இயற்கையே மொழியாய் இருந்தது. அந்த இயற்கையின் மொழிக்கு எழுத்துக்கள் தேவைப்பட்டிருக்காது. இயற்கையில் கலந்திருந்த மனிதனுக்கு அவன் காண்கிற ஒவ்வொன்றுமே அவனுக்கு எதையாவது போதித்திருக்கும். அப்படி யாரோ ஒருவனுக்கு சித்த மருத்துவங்கள் பேசும் கலப்பைக்கிழங்கும் கூட ஒரு மொழியைப் போல ஒன்றை போதித்திருக்க கூடும்.

"ஏனோ
உலகில் எல்லாப் பூக்களும்
நதிகள் தன்மேல் பாய்வதுபோன்ற
தோற்றத்தைதான்
இதழ்வரிகளில் நினைவுகூர்கின்றன"

காண்கிற, கடந்து போகிற பூக்களை இப்போதுதான் உன்னிப்பாய் அவதானிக்கிறேன். எத்துனை விசித்திரங்களை இந்த பூக்கள் வைத்திருக்கின்றன. எத்துனை விசித்திரமான உணர்வுகளை இந்த பூக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஒரு ஆன்மா இயற்கையோடு நெருங்கிவிடுகிற போது அது அவனை அள்ளி அனைத்து ஆசுவாசப்படுத்திவிடுகிறது. இப்போது பூக்களை மெல்லா நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதன் இதழ்களை வருடிப்பார்க்கிறேன். அவை உலகின் நதிகள் பாய்வது போன்று வரிகளை மட்டுமே கொண்டதில்லை. ஆழமான நதிகள் கொண்டிருக்கும் அமைதியையும் வைத்திருக்கின்றன.

"இன்னும் சற்று நேரத்தில் கூரைக்குள்
நானும் மழையாகிவிடுவேன்
நடுக்கத்துடனேதான் காத்திருக்கிறேன்
முக்கியமற்ற எனது அன்பின் கண்ணாடியில்
வழியும் உண்மைகளை உங்களிடம் காண்பித்து விடவும்
எனது இயலாமைதான்
மழைக் காற்றில் மருதாணிப் பூக்களின் வாசமாய்
வாசலில் இருந்து பரவிக்கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லவும்"

இருக்கும் ஒற்றை நம்பிக்கையும் உடைந்துவிடுகிற கணத்தில் பரவிக்கொள்ளும் அச்சத்தையும் அதன் நடுக்கத்தையும், ஒரு புறக்கணிப்பையும், இயலாமையின் வலியையும் மனதிற்கு மிக அருகிலிருந்து விசும்புகறது இந்த கவிதை. இதை வாசித்த போது சொல்லத்தெரியாத ஒரு படபடப்பு என்னை பற்றிக்கொண்டது. அந்த படபடப்போடுதான் இதையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் கடந்து அத்தனை புறக்கணிப்புகளும், என் இயலாமையால் நான் இழந்தவைகளையும், என் தோல்விகளையும் மீட்டிக் கொண்டிருக்கறேன்.
"வனகதலிக்காடு" என்கிற தலைப்பில் இருக்கும் கவிதையில்

"நெடுந்தரிசனம் ஒன்றில்
முக்காலத்தில் உன்னைக் கண்டேன்
இருவர் உனதருகே இருந்தனர்
அவர்கள் அந்நிய தேசத்தினராகவும்
வணங்கப்பட்ட தெய்வம்
வால்பூச்சியின் உடல்வாகிலும் இருந்தது"

முக்காலத்திலும் நீளும் மெய்பொருளின் நித்திய தரிசனத்தை ஒரு இறந்த காலத்தில் வைத்துவிட்டு அதை கவிதையின் வழியே முக்காலத்திலும் கிடைக்கும் நெடுந்தரிசனத்தை வாசகனுக்கும் தந்துவிடுகிறார். வால்பூச்சியின் உடல் வாகில் ஒரு தெய்வம் இருந்தால் அது அற்பானதாகிவிடுமா? வனகதலிக்காட்டில் முழுமையாக நுழைந்துப்பாருங்கள். அங்கே காண்பவைகள் வாழ்நாளில் கண்டிராத அதிசயங்களாய் நிச்சயம் இருக்கும்.
"Susan 43
------------------
கதாமஞ்சரிக் காட்டுவழி
இன்றும் நடக்கத் துவங்கிவிட்டாயா
சூசன்
வானவில்
பள்ளத்தாக்கில் தொங்கிய போது
அதனை இழுத்து நெற்றியில் ஏன் கட்டினாய்
நிலத்தைப் பார்
நிறங்கள் அத்தனையும்
பவளப் பாம்புகளென நெற்றியிலிருந்து நெளியத் துவங்கிவிட்டன சூசன்
உனது உடலின் அதிர்வில்
மூடுபனி வஸ்திரங்கள் ஆகின்றன
நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்
நீ தொடும் மரங்கள் நீல நிறமாகவும்
உனது காலடித் தடம் மஞ்சளாகவும்
உனது கண்கள் இன்று கடல்பச்சை நிறத்திலும்
இருப்பதன் காரணம் என்ன
இன்றும் உன் பின்னால் நானிருப்பதை உணரவில்லையா
காட்டின் ஒற்றையடிப் பாதையில்
43 என்ற எண்ணும்
ஒரு முக்கோணக் குறியும் நீ
இட்டது ஏன்
அந்நேரம் அப்பாதை
ஒரு துண்டுப் பேரலையெனப்
புரண்டது ஏன்
ஒரு வெண்சங்கின் கூர் நுனியால் அவ்வலையை
நீ நிறுத்தியது ஏன்
பின்னும் பல வண்ண நேர் கோடுகளை வடக்கே நீ
எறிந்தது ஏன்
அந்நேரம் அங்கே வந்தவன் யார்
பாம்புகள் காட்டுக்கொடிகளாகின்றன
சூசன்
நிறங்கள் உறைகின்றன
நீ மட்டும் ஒரு மரத்தில்
நுழைந்துவிட்டாய்"

சூசன் கவிதைகள் பிரதிகர்த்தாவின் குறித்த சில கனவுகளின் குறிப்புகள், கனவுலகின் காட்சிகள் குறியீட்டு படிமங்களாய் இருக்கலாம். அத்தகு குறியீட்டு படிமங்களை கவிதையின் படிமங்களில் மீண்டும் குறியீடுகளாய் பதிவு செய்திருக்கிறார். அதிசயாமான ஆன்மீக கனவுகளின் தரிசனத்தை கவிதைகளின் வழியே எழுதும் இவரின் ஆன்மீக பக்கங்களை நான் தாழ்திறக்க முனையப் போவதில்லை..

"வெறுமை உண்மையாகிய ஆதியாய் இருந்தது
வெறுமையின் உட்கரு இருளாய் இருந்தது
இருண்மையில் நெழிந்த ஆதி அணுவிலும் வெறுமைதான் இருந்தது
வெறுமையின் அணுக்கள்
எண்ணிக்கையில் என்றும் அடங்கா தனிமைகளைப் பிரசவித்தன
தனிமையின் அணுக்கள்
இருளை ஒளியாகவும்
ஒளியை இருளாகவும் பிணைக்கும் கருவறைகளாகின
எல்லா கருவின் மையத்திலும்
இன்மையே உயிராகிறது
எல்லாம் வெறுமையின் வெவ்வேறு வடிவங்களே
ஆம்
என்பதே துவக்கமும் முடிவும்
ஏன் எனில் இல்லை
இல்லை என்பது இருக்கிறது
வெறுமையின் வெளியே மாயையும் மனதிற்கு இனியதுமாய் இருக்கின்து
மனக்கண் பூக்களைப் பருகுதல் அதிகபட்சமான வாழ்வு
எல்லாம் வெறுமையை நோக்கிய பயணமே
இருப்பது பிழை
மாய்வதும் வீண்
மற்றொரு பிரபஞ்சமும்
வெறுமையிலிருந்தே துவங்கும்"

இப்படி இந்த பிரபஞ்ச தோற்றத்தின் சூட்சுமங்களை ஒற்றை கவிதையில் பேசிப் போகின்றார்..

"இருத்தல் வெப்பத்தின் தோற்றம்
உள்ளுறை வெப்பம் பனியாகையில் நாம்யார்"

இருத்தலின் வெப்பம் என்பது நம் இருப்பிற்கு ஆதாரமான உயிரைக் குறிக்கிறது. அந்த வெப்பம் பனியாகிப்போனால், நம்மை மரணம் சேர்ந்துவிட்டால் பின் நாம் யார்? என்று கேள்வியெழுப்புகிறார். கொஞ்சம் நம் ஆழ்மனதின் கண்களை திறக்கச் சொல்லி வார்த்தைகளால் நம்முகத்தின் மீது வீசி எறிகிறார்.

"காடுகள் மேல் படியும் மகாத் துயரை
ஒரே ஒரு மரங்கொத்தி தட்டத்துவங்கும்
பின் அதன் கூட்டில் தேங்கும் நீரில்
வானமும் உறங்கும்"

இந்த கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டே இருக்கிறேன். மொத்த கவிதையும் இவ்வளவுதான். கூட்டில் தேங்கும் நீரில் மொத்த வானத்தின் பிம்பமும் உறங்குவதைப் போல பெரும் துயரம் போர்த்திய மனதை இந்த கவிதை தட்டத்துவங்குகிறது...
நரம்புகள் சுவைமிக்க நாவுகள்
----------------------------------------------
ஆம்
இங்கு எதுவும் இல்லை
இல்லை இங்கு யாம் செய்த தவம்
தவம் எனில் இதற்கு
இதற்காகவா... என்பதே மிஞ்சும்
மிஞ்சும் எதற்கும் பூநிழல்
பூநிழல் பிரகாசம் எனில் நிழல் இரவின் கசம்
கசம் பிரகாசத்தில் கரைக்கயியலா உண்மை
உண்மை காய்க்கும் மரம்
காய்ப்பவை எல்லாம் நினைவுகள்
நினைவுகள் காதுகளுடன் நடப்பவை
நடப்பவை எல்லாம் ஒருவகையில் அதிர்ச்சி
அதிர்வு இசை தன்மை கொண்ட நரம்புகள்
நரம்புகள் சுவைமிக்க நாவுகள்
நாவுகள் ஐந்து உடலில்
உடலில் பைத்திய சுவை கசப்பு
கசப்பை தெளிக்கும் காலம் கால்கடுக்க
கால்கடுக்க காலம் இருக்கும்
இருக்கும் யாவும் இங்கு
ஆம்
Irreversible
--------------
ஆம்
இங்கு யாவும் இருக்கும்
இருக்கும் காலம் கால்கடுக்க
கால்கடுக்க காலம் தெளிக்கும் கசப்பை
கசப்பு சுவை பைத்திய உடலில்
உடலில் ஐந்து நாவுகள்
நாவுகள் சுவைமிக்க நரம்புகள்
நரம்புகள் கொண்ட தன்மை இசை அதிர்வு
அதிர்ச்சி ஒருவகையில் எல்லாம் நடப்பவை
நடப்பவை காதுகளுடன் நினைவுகள்
நினைவுகள் எல்லாம் காய்ப்பவை
மரம் காய்க்கும் உண்மை
உண்மை கரைக்கயியலா பிரகாசத்தில் கசம்
கசம் இரவின் நிழல் எனில் பிரகாசம் பூநிழல்
பூநிழல் எதற்கும் மிஞ்சும்
மிஞ்சும் என்பதே ... இதற்காகவா
இதற்கு எனில் தவம்
தவம் செய்த யாம் இங்கு இல்லை
இல்லை எதுவும் இங்கு
ஆம் "

இந்த இரண்டு கவிதைகள் இல்லை. ஒற்றைக் கவிதை. கீழிருந்து மேல் நோக்கியும், மேலிருந்து கீழ் நோக்கியும் எப்படி வாசித்தாலும் பொருள் தரும் கவதை இது. தேன் மொழிதாஸின் இத்தகைய பரீட்சார்த்த கவிதகைள் அனந்தமிருக்கின்றன.
இந்த "காயா"வை அத்துனை இலகுவில் என்னால் வாசித்து முடிக்க முடியவில்லை. அதனுள்ளே பொதித்து வைத்திருக்கும் மறைபொருளின் செறிவும் வார்த்தைகளின் கனமும் அத்துனை இலகுவாய் காயாவை பருகிமுடிக்க விடாது..
ஒவ்வொரு கவிதையிலும் அவர் பேசும் இயற்கையோடு இருக்கும் ஆத்மார்த்த நெருக்கமும் அந்த இயற்கை அவருக்கு கொடுத்திருக்கும் ஞானமும் வியக்கத்தக்கவை. முன்னுரையில் எழுதியிருப்பதைப்போல சங்க காலத்தில் கவிதைகள் எழுதிய பெண்களில் ஒருவர் மீண்டும் வந்து எழுதுவதைப் போன்ற உணர்வு மிகையான கூற்று இல்லை. இன்னும் அவர் எழுத்துக்கள் உருவாகும் ஆழத்தை நம்மால் அனுமானிக்க முடியாது. நம்பிக்கைகள் கடந்து அவரின் அனுபவங்களில் காணும் அமானுஷ்யங்களை, ஆன்மீக தெளிவுகளை, ஞானத்தின் சிதறல்களை இந்த பிரதியெங்கும் காணமுடியும்
காயா தரும் உணர்வுகள் அத்தனையும் எழுத்திலோ வார்த்தைகளிலோ சொல்லி முடிப்பது சாத்தியம் இல்லை.
                                                                                               #மிஸ்பாஹுல்ஹக்



Monday 5 February 2018



உன் காதலியின் உதடுகளில் என்னைப் புதைத்து
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குளிர் காமத்தை அடைகாப்பதை உணர்ந்த போது
குருவியென உன் வீட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தேன்
உன் காதலியின் உதடுகளில் என்னைப் புதைத்து
மீண்டு வர இயலாது தவித்தாய்
எனது கல்லீரலை அவளின் இடதுகரம் பிடித்திருந்தது
கற்பனைகளால் அலங்கரிக்கப்பட்ட அவள்
என்னை எதிர்கொண்ட போது
அதனை கற்களாகவே அள்ளினேன்
அவளின் இதயம் பூமியில் விளைந்து சிதறித் தொலையும்
எள்ளின் விதையென மாறிப்போகும்
அந்நாளை நான் கண்டும் கடந்தேன்
பைத்தியத்தின் மொழி சிறு புன்னகையில் துவங்குகிறது
கூட்டம் கூட்டமாய் வெட்டுக்கிளிகள் புறப்படுகின்றன
இனிய பொய்களோடு குழி முயல்களும்
அவள் நரம்பில் உன் கண்கள் கிடப்பது
எனக்குள் பித்த ஊற்றாகிறது

Composed by - Thenmozi das
14.11.2011
3.23 am



Anais Nin’s Diary
=============
நிர்வாண உடலில் பூசப்பட்ட
ஓவியங்களுக்கு உள்ளேயும்
சுயநிறமிழக்காத முலைகளைப்
பார்த்துக்கொண்டே வருகிறாள் அனைஸ்
எனக்குத் தெரியும்
கனிந்த ராஸ்பெர்ரி பழங்களை விடவும்
இனிமை மிக்கதொரு
அழகியின் முலைகளை ருசித்தவள் இவளென

இரகசியங்கள் ஏதும் மறைக்கப்படாத
நாட்குறிப்பேட்டின் பக்கத்தில்
அவளைப் பற்றி அனைஸ்
இப்படி எழுதி வைத்திருக்கிறாள்

“எனக்குள் தீராத ஒரு கொடுங்கனவு இருந்தது
அப்போதுதான் June
திடீரென இந்நகரத்திற்குத் திரும்பியிருந்தாள்
நாங்கள் தாழிடப்பட்ட ஒரு அறையில் தனித்திருந்தோம்
அப்போது
ஆடைகளை ஒவ்வொன்றாகக் களையத் துவங்கினேன்
அவளது ஆடைகளைக் களையச் சொல்லிக் கெஞ்சினேன்
அவள் இரு கால்களுக்கிடையே
அணைக்கயியலாது கனலும் நெருப்பினைக்
காணவேண்டுமெனச் சொன்னேன்”

கையில் சிரெட்டுடன் படுத்திருந்தாள் ஜூன்
எல்லாப் பருவகாலத்துக் குளிரும் திரண்ட கோளமென
கண்கள் அவ்வறையில் நடப்பட்டிருக்க
ஒரு ஆணின் முதுகென
சிகரெட்டில் கனல் இறங்கியபின்
வெளிப்பட்ட புகையின் சுருள் வளையங்களுக்குள்
அனைஸின் முலைகள் பூக்களெனச் சிக்கின
June தன்னிரு குடைக்காளான்களால்
அப்பூக்களை நசுங்கச் செய்தாள்

இதைப்பற்றித் தன் நாட்குறிப்பேட்டில்
“June என்மேல் அசைகையில்
என் உடல் முழுவதையும்
ஆண்குறி தழுவுவதுபோல் உணர்ந்தேன்”
என எழுதினாள் அனைஸ்

புணர்தலுக்குப்பின் பிரிக்கயியலாப் பட்டாம்பூச்சிகளென
இரு ஜோடி உதடுகள் கூடிக் கிடந்ததை
மறக்கவே முடியவில்லை என்னால்

இப்போது ட்ரம்பெட்டின் இசையைக் கேட்கிறேன்
சிறு தொலைவில்
ஹென்றி பெருங்கனவுடன் வருகிறான்
இசையை விடவும் இசைக்கின்ற கலைஞர்கள் அற்புதமென
உடலொரு திசையில் நடக்க
உதிர்ந்த நாவல் பழங்களென அனைஸின் கண்கள்
அந்நகரத்துச் சாலையைக் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக்கடக்கின்றன
ஆடையணியவிரும்பாத வெளிச்சமென சிலர்
நிர்வாணமாய் அலையும்
உணவு விடுதிக்குள்ளே
நிரம்பிய மதுக்கிண்ணமென அவள் நுழைகையில்
ரிச்சர்டு இவ்வாறு கூறத் துவங்கினான்

“அவன் என்னிடமிருந்தும் hugoவிடமிருந்தும்
உன்னைத் திருடிக்கொண்டான்
எனது முக்கியமான சில சிந்தனைகளை எடுத்து
தனது நாவலில் பதிவு செய்துவிட்டான்
என்னை உன் காதலன் என்றும்
உன் கணவனுக்கு மிகச்சிறந்த நண்பனென்றும்
நினைத்துக்கொண்டிருந்தேன் Anais
அவன் கடுமையாகச் சித்ரவதை செய்யக்கூடியவன்
புரூக்லைனிலிருந்து வந்த காட்டுமிராண்டி
என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறான்
வெளியே நண்பனாக நடித்துக்காண்டு
ஆத்மார்த்தமான நண்பர்களைக்கூட
தன் படைப்புக்கான
கச்சாப் பொருளாகப் பயன்படுத்துகிறான்
இன்னும் ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன்
எனது வீட்டுக்குள்
இனி புணர்ச்சியில் ஈடுபடக் கூடாது”

ரிச்சர்டு அவ்விடம் விட்டுப் போன பின்
அனைஸின் விருப்பம்
ஹென்றியை விடுதியின் அறைக்குள் அழைக்கிறது

இருண்ட நினைவுகளை வெட்டியெறியப்பட்ட
படச்சுருளெனக் காயும் கம்பளிக்குள்ளே
வெண்ணிற களிமண் தோட்டமெனச்
சரிந்து கிடக்கும் அவள் தேகத்தில்
பறிக்கச் சொல்லி நீட்டிய
ரோஜா மொட்டுக்களை அவன் சுவைக்கிறான்
பின் இருள்விலகாத் தீவின் ஒருவழிப் பாதையில்
அவன் நீரூற்று பாய்ந்து அடங்குகிறது

அக்கணம் ஓயாத trumpetன் ஓசையை அவ்வறையின்
குளிரூட்டப்பட்ட ஜன்னல் மழைத்துளிபோல் நீட்ட
கதகதப்பான நிர்வாணத்துடன் ஓடிச்சென்று
கதவு திறக்கிறாள்

எண்ணற்ற இசைக் கருவிகளின் ஆரவாரத்துடன்
அடங்காத காட்டினின்று புறப்பட்ட வெட்டுக்கிளிகளென
அந்நகர வீதியை
நிர்வாணத்தால் வீழ்த்தியிருந்தார்கள்
திராட்சைப் பழத்தின் மேல்தோல் கிழித்துப் போர்த்தி
அனைஸ் அவ்வழியே நடக்கத் துவங்குகிறாள்
கழுகின் முகமேந்திய நீல உடலொன்று
அவளைப் பின்தொடர்கிறது

புத்தாடை அணிந்த சிறுமியின் கர்வத்துடன்
ஓவியங்களை உடுத்திய மனிதர்கள்
ஏதேன் தோட்டத்து ஆதிக் குகையைத்
தன் நடனத்தில் வரைந்து காட்டி அலைகையில்
முலைகளையே உன்னதமான ஆடையெனக் கருதும்
ஒரு பெண்ணைக் கடக்கிறாள் anais
அப்போதும் நீலவுடல் அவளைப் பின்தொடர்கிறது

தண்ணீரின்மேல் மரக்கட்டைகளை அடுக்கி
இசைக்கும் ஒருவனை
அயராமல் அவள் பார்த்துக்கொண்டிருக்கையில்
தொடர்ந்து வந்த கழுகு முகத்தின் உடல் அவளை
ஒரு நொடியில் வீழ்த்திப் புணர்கிறது
அவள் இனிமையின் விளிம்பில் கண்களைத் தாழ்த்தும்போது
I love you pussy willo என்கிறது அக்கழுகு
முகத்திலறைந்த அவ்வார்த்தையில்தான்
தன்னைப் புணர்வது கணவனென உணர்கிறாள் அனைஸ்

அன்றிரவு அவள் எழுதிய நாட்குறிப்பேட்டில்
“ஹென்றிக்கு எதிரான உணர்வுகளுடன்
முழுமையாகக் கணவனுக்கு என்னைக் கொடுத்தேன்
அந்த அனுபவம் உடல்ரீதியான பேரின்பம்
ஹென்றிக்கு நான் இழைத்த முதல் துரோகம்
இருப்புக் கொள்ளாமல் இருக்குமளவுக்கு
நான் மாறியிருக்கிறேன்
ஏற்பட்டிருக்கும் உற்சாகத்திலும் சாகச உணர்விலும்
இனி முற்றிலும் உண்மையானவளாக இருக்க வேண்டும்
அதே சமயத்தில்
ரகசியமாக வேறொரு மனிதனைச் சந்திக்கவும் விரும்புகிறேன்
பாலுணர்வைத் தூண்டக்கூடிய
அநேகக் கற்பனைச் சித்திரங்கள்
என்னிடம் இருக்கின்றன
எனக்கு அவ்வின்பம் தேவையாகவும்
இருக்கிறது.”

■ Thenmozhi Das 1st Experimental Poetry
Written on ..... 01.08.2005

Poetryplay written by - Thenmozhi Das in Tamil
Screenplay Written by - Philip Kaufman in English
Annis written Dairy - in French
----------------
இந்தக் கவிதை, American director Philip Kaufman's (Henry and June ) என்னும் திரைப்படத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டில் பிரபலமான இலக்கிய ஆளுமைகள் இருவரின் இளம் பிராயத்து வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம் இது. இளம் பெண் படைப்பாளியுமான அனைஸ் நின் 1931இல் பாரிஸில் அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி மில்லரைச் சந்தித்தப் பின், சுய தேடலுக்கான பயணத்தை மேற்கொண்ட அவர், தனது அனுபவங்கள் அனைத்தையும் டயரிகளில் எழுதுகிறார்! அனைஸின் டயரிகளில் மறைக்கப்பட்ட பகுதிகளை அடிப்படையாகக் கொண்டது “ஹென்றி அன்ட் ஜூ” படம்.
தனது டயரிகளின் மூலம் பிரபலமான அனைஸ், பல நாவல்களையும், சர்ரியலிஸப் பாணியிலான ஒரு வசன கவிதையையும் எழுதியுள்ளார்.
-------------
2005 ல் இணை இயக்குநராக பணியாற்றிய காலம் மனதில் திரைக்கதையை விடவும் இனிமை மிக்க கவிதையை / திரைக்கதையை விட காட்சிபூர்வமாய் ஏன் இயற்றக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் வந்தது . எத்தகைய உலகத்தரமான சினிமாவையும் ஒரு கவிதை எளிமையாய் கைக்கொள்ளவும் கடக்கவும் மீறவும் முடியுமா எனப் பரிசோதிக்கத் தோன்றியது .... எனது வாழ்வு இயக்குநராவது அல்ல . கவிதையே எனது வாழ்வு. இதில் நான் என்ன வித்தியாசம் செய்ய இயலும் என நினைத்தேன்.
இக் கவிதை எழுதி முடித்த போது
எத்தகைய கலையையும் விட
"கவிதையே ஆகச் சிறந்த கலை" என -மனம்
உறுதி கொண்டது .
காரணம் கவிதைக்குள் திரைக்கதையை தகர்க்க முடிவது மட்டுமல்ல. .. இசையையும் எழுப்ப முடிகிறது.
ஒரு கவிதை ஒரு திரைக்கதையை விட
எவ்விதத்திலும் குறைந்ததல்ல .

- தேன்மொழி தாஸ்
                                               Cinema - cut to - Poetry

மூடுபனியின் நீர்ச்சால்கள்

காற்றின் வரையறைகளை கண்டுணரும் மலைவாசிக்கு யானைகளின் லத்திகள் காட்டு வழிகளின் இரகசியங்கள் யாருமற்ற போது அடி வயிற்றிலிருந்து எ...