Wednesday, 14 August 2019

மூடுபனியின் நீர்ச்சால்கள்









காற்றின் வரையறைகளை
கண்டுணரும் மலைவாசிக்கு
யானைகளின் லத்திகள்
காட்டு வழிகளின் இரகசியங்கள்


யாருமற்ற போது
அடி வயிற்றிலிருந்து எழும்
நாதமிக்க வேதனைகளை எதிரொலிக்கச் செய்ய
பள்ளத்தாக்கு தான் பூமியின் காதுகள்

வல்லூறின் கண்களறியா பாதை
வாலிபனின் காமம்

பனிக்காலம் அவன் பசிய கைகளுக்கு பரண்

மூடுபனியின் நீர்ச்சால்கள்
அவன் பிள்ளைகளுக்கான
நற்செய்திகளின் உறைபீடம்

வானம் மழை விளைநிலம்
துளிகள் மூதாதையரின் முத்தங்கள்

காட்டு வெற்றிலை ஆதி மனிதனின்
சுவைமொட்டுகளைத் திறந்த
மந்திரத் தாவரம்

அடர்ந்த கானகத்தில்
வழிதனை தெளிக்கையில்
உரிமைகளைப் பற்றிய
மலைவாசியின் புலம்பல்கள்
ஆகாச கருடனுன் பின்னிப் பறக்கும்
போர் பாடல்களின் ஆதிதாளம்

உழைப்பாளியின் மிச்சம்
வாரத்தின் கடைசியில் சோற்றுப்பானையில் கிடக்கும் கல்

அதன் சத்தம் அவன் குழந்தைகளுக்கு
போதுமான அறிவுரை

காட்டுத்திரவியங்கள்
மலை மனதின் வாசனை

பொன்னும் ஸ்படிகமும் விலையேறப்பெற்ற கோமேதகமும்
மலைவாசிக்கு வீண் பாறை

மான்கறியும் காட்டுக்கோழிக் குழம்பும்
வாழ்வாதாரத்தின் போதாமை
வேட்டையின் புகழ்

அவனது தேவை காய்ந்த விறகும்
காட்டுப்புறாவின் சிறகும்

 -தேன்மொழி தாஸ்
27.7.2016

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

மூடுபனியின் நீர்ச்சால்கள்

காற்றின் வரையறைகளை கண்டுணரும் மலைவாசிக்கு யானைகளின் லத்திகள் காட்டு வழிகளின் இரகசியங்கள் யாருமற்ற போது அடி வயிற்றிலிருந்து எ...