Saturday 10 February 2018

லதா
--------
கின்னரக் காட்டின்
கரை வழியே
நடந்து போகிறேன்

துத்தி மரத்து இலைகள்
துணை பதைக்க
உதிர்ந்தவாறே இருக்கின்றன

மலையின் மெல்லிய இசைகளைச்
சேகரித்துக்கொண்டே
அந்த ஓடை பாடி வருகிறது

கரையில் அடர்ந்திருக்கும்
உண்ணிப் புதர்தான் மெளனத்திற்கெனப் பாடிய
உன்னதமான பாடலாய் இருக்க முடியும்

தாலம் அசைத்தபடி வரும் யானையும்
தாடை துடைத்தபடி வரும் மானும்
தாகிக்கையில்
லதா
குளிராய் அவைகளுக்குள் சென்றிருக்கக் கூடும்

அந்தப் பனிநீர் ஊற்றருகே குனிந்து
லதா அக்கா என்கிறேன்

பாடலை நிறுத்துகிறாள்
அவள் விரல்கள் தான்
மெல்லிசையென உணர்கிறேன்

என்னை அணைத்துக்கொள்ள
அவள் சீதளமாவது புரியும் போது
கண்ணீரோடு அள்ளி முகத்தில் ஊற்றி
உதடு துடிக்க
அவள் முத்தங்களைக் குடிக்கிறேன்

"எப்படி இருக்கிறாய்"
என்றெல்லாம் கேட்கவே முடியாது

ஏனெனில்
வெத்தலை தின்னாம் பாறைக் காட்டருகே
இன்னும் ஊறி வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறாள்
லதா

Composed by - Thenmozi Das
5.1.2004

#ஒளியறியாக் காட்டுக்குள்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

மூடுபனியின் நீர்ச்சால்கள்

காற்றின் வரையறைகளை கண்டுணரும் மலைவாசிக்கு யானைகளின் லத்திகள் காட்டு வழிகளின் இரகசியங்கள் யாருமற்ற போது அடி வயிற்றிலிருந்து எ...