Wednesday, 16 August 2017


  (கா) ( டு ) வுள்

சிந்தனைகள் தாபரங்களில் தூங்க மறுத்து
மூளையின் இயக்கப்புறணியை புரட்டுகின்றன
முன் எப்போதோ கனவில் கண்டது
பின் எப்போதோ பகலில் காணக்கிடைக்கும்   
வானம் என்றேனும் வடிவம் வேண்டி அலறும்
பூமி அந்நாளில் புலம்பும்
அதுவரை
நீரின் தாயை நித்திரையடையாமல்
இருக்கும்படி சொல்கிறேன்
மனிதனின் திருவெலும்பு 
திடங்கொண்டு இருக்கையில்
தாற்றுக்கோலை தேடுமோ
தேடினால் புரியும்
ஆழத்தின் முகம் பனிக்கல்
காதலின் முகம் மாயக்கல்
பிடரி மடலில் அது மறைந்தே இருக்கட்டும்
நம்பிக்கைகளை மூடன்
கருமைமிக்க காந்தமாக்குகிறான்
ஞானியின் இதயம் இதனருகே
புன்னகையுடன் விலகும்
ஞானிக்கு அறிவின் உணவு
சிங்கத்தின் நகத்திலும் கிடைக்கும்
ஆனால் ஒருபோதும்
காட்டிற்கான உணவை கடலால் தர இயலாது
காடு சுயம்பு
நீரினை படைத்துக் கொண்டே இருக்கும் கடவுள்


- தேன்மொழி தாஸ்  

25.2.2016
1.14 am

                  




No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

மூடுபனியின் நீர்ச்சால்கள்

காற்றின் வரையறைகளை கண்டுணரும் மலைவாசிக்கு யானைகளின் லத்திகள் காட்டு வழிகளின் இரகசியங்கள் யாருமற்ற போது அடி வயிற்றிலிருந்து எ...