இந்தக் கவிதை வாழ்விற்குப் பின்னே உங்களுக்கொரு வசந்த வாழ்வு இருக்குமல்லவா?
கவிதை வாழ்விற்குப் பின்னே எனில் எனது மறைவிற்கு பின்னே என்று தான் சொல்ல முடியும். கட்டாயம் அது ஒரு வசந்த நித்திய வாழ்வாக இருக்க வேண்டும் என்ற பயணமே இக்கவிதை வாழ்வு. வாழ்ந்துகொண்டிருக்கும் போது கவிஞனுக்கு வசந்த வாழ்வு உண்டா எனில் அது கேள்விக்குறி தான். மணல் தொடங்கி நட்சத்திரங்களின் கீற்று வரை யாவும் வரையறுக்கத்தக்கதும் வரையமுடிந்ததுமாய் இருக்கிறது. வாழ்வு தவிர பேசிக்கொண்டிருக்கும் போதும் மெளனமாய் இருக்கிறேன் என அறிந்தவர் யாருமில்லை. மாற்றம் வருமெனக் காத்திருப்பதும் மாற்றத்தை உண்டுபண்ணிக் கொள்வதும் வீண் என நினைக்கிறேன்.
வாழ்வை அன்பினால் போர்த்துகிற வேட்கையை உங்கள் கவிதைகளில் அதிகமாக காணமுடிகிறது. அன்பிற்கும் அநாதரவுக்கும் இடையே உங்கள் குரல் தொங்கிக் கொண்டிருக்கிறதா ?
உண்மை. எனது பால்யகாலம் ஒரு பெரு அமைதிமிக்க மலைவாசஸ்தலம். முழுக்க முழுக்க காட்டு வாழ்க்கை. இசையாலும் அன்பாலும் போர்த்தப்பட்ட நிறைவின் பெருவெளி. அன்பே பிரதானமாகக் கருதப்பட்டு படிப்பிக்கப்பட்டது . இசை பிராத்தனை உழைப்பு இவை மட்டும் தான் பெற்றோரால் அறிமுகப்படுத்தப்பட்டன . மிகுந்த கவனமுடன் "உறவினர்களை அறிமுகப்படுத்துதல் " கூட தாயிடமிருந்து விலக்கப்பட்ட கனிகளாக இருந்தன .ஆலயம் செல்வது பிரார்த்தனை செய்வது பாடல் இயற்றி பாடுவது ஒரு நாளில் ஒரு பத்து பாடல்களாவது வீட்டில் பாடவேண்டும் என்பதெல்லாம் அம்மாவின் நிர்பந்தம். எனில் அப்பா கம்யூனிஸ கொள்கைகளில் மிகவும் ஆழ்ந்த பிடிப்பு மிக்கவராக இருந்தார்.
வீட்டில் தெய்வப் படங்கள் வைப்பதை உருவ வழிபாட்டை அப்பா கடுமையாக கண்டித்தார். வீட்டின் சுவர்களை லெனின்,காரல் மார்க்ஸ் ,ஏங்கல்ஸ் மற்றும் பிரபாகரன் படங்கள் மட்டும் தான் வைக்க அப்பாவிடமிருந்து அனுமதி இருந்தது. பெரிய பெரிய அளவில் சிவப்பு கடின அட்டை கொண்ட தேசத்தலைவர்களின் புத்தகங்கள் அனைத்தும் அப்பா வைத்திருந்தார். திருவிழா அரசு விடுமுறை நாட்கள் ஏன் கிறிஸ்துமஸ் இவற்றிக்கு அம்மா ஆடைகள் பரிசளித்தால் மே 1 க்கு அப்பா சிவப்புப் பாவாடையும் வெள்ளைச் சட்டையும் வாங்கித் தருவார். அதோடு மட்டுமல்ல காரல் மார்க்ஸின் வரிகளை மேடையில் என்னைப் பேசவைக்கப் போராடுவார்.
என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு தினத்தை என் அப்பா உருவாக்கினார் . எனக்கு 6 வயது "உலகம் என்னிடமிருந்து தான் தோன்ற வேண்டும் - என் இதயத்தில் அது வேரூன்ற வேண்டும் - என் இரத்தத்தில் அது ஊற்றெடுக்க வேண்டும் என் ஆன்மாவின் மூச்சில் அது வசிக்க வேண்டும் " என்ற மார்க்ஸின் இக்கவிதை தான் எனக்கு அறிமுகமான முதல் கவிதை.
அப்பாவின் மார்பில் அமர்ந்தபடி உயர்ந்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தேன் அன்றிரவு . மறுநாள் மலை வெளியில் நாங்கள் மேடை நோக்கி பயணம் செய்த போது வெளியெங்கும் "தோட்டத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்" என்ற வாக்கியம் பாதைகளில் எல்லாம் இருப்பதை கவனித்தேன். என் கையில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் இட்ட சிவப்பு வெள்ளைக் கொடி இருந்தது. அப்போது அப்பாவிடம் "அப்பா ஏன் சிவப்பு பாவடையும் வெள்ளை சட்டையுமே எடுத்து தாரீங்க இந்தக் கொடிலயும் அதுதான் இருக்கு" என்றேன். அதற்கு அப்பா " அது உயிரின் நிறம். உண்மையின் நிறம். அது போராட்டத்தின் நிறம் . சிவப்பணுக்களும் வெள்ளையணுக்களும் நம் உடலின் உள்ளே போராடும் வரை தான் வாழ்க்கை. அது போராட்டத்தை நிறுத்தும் போது தான் நமக்கு மரணம் சம்பவிக்கும். போராட்டம் உடலிலும் புரட்சி என்பது மனதிலும் இயற்கையாகவே இருக்கிறது நாம் தான் போராட மறுக்கிறோம் . ஜாதி மதம் கீழ்தட்டு மேல்தட்டு இதெல்லாம் கூத்தாடிகள் குளிர்காயும் விறகு. உழைப்பதும் உண்மைக்காக போராடுவதும் மட்டும் தான் சரியான வாழ்வு" என்றார்.
என் ஆழ்மனதின் ஆணிவேர் இதுதான் என் தந்தையின் வார்த்தைகள் தான். என்றென்றைக்குமான வாழ்வு. தாய் அர்ப்பணித்து அன்பும் தந்தை அர்ப்பணித்த போராட்ட குணமும் தான் அன்பிற்கும் அநாதரவிற்குமான குரலாக என்னுள் கிடக்கிறது .
அதனால் தான் அன்பிற்கென நடப்பதே இவ்வுலகில் வலிமையானபோராட்டம் என எழுத வாய்த்தது.
திரைப்படத்துறையில் இயக்குநர் பாரதிராஜா அவர்களோடு பணியாற்றினீர்கள் . பின்னர் அத்துறையில் இருந்து முற்றாக நீங்கிவிட்டீர்களே ஏன் ?
எனக்கு இரண்டு துறைகளில் அனுபவமுண்டு . இரண்டுமே எனக்குள் திணிக்கப்பட்டது என்பது தான் உண்மை . மருத்துவத் துறையை எனக்கு தேர்வு செய்து வழிநடத்தியது எனது அப்பா. இதிலிருந்து ஓரே நாளில் திரைப்படத் துறையில் என்னை எடுத்துச் சென்றது இயக்குநர் பாரதிராஜா. இரண்டுமே என் மனதிற்கு பிடித்தவைஅல்ல. நிர்பந்திக்கப்பட்டவை.
ஆனால் கட்டாயம் தெரியும் எனது விதி கவிதை தான். காரணம் சிறு வயதில் யார் கேட்டாலும் நான் கவிஞராவேன் ." நான் கவிஞர்" என்று சொல்வதுண்டு. ஒரு நாள் அப்பா சொன்னார் "Art it's a Extracurricular activity" கலையே வாழ்க்கையில் வேண்டும் எனில் நீ வாழ்வையே அர்ப்பணிக்க வேண்டியிருக்கும். நீ அதற்கு உன்னை தயார் செய்வாயா" என்று கேட்டார். செய்வேன் நான் கவிஞராவேன் என்றேன் அப்போது எனக்கு வயது 5 . எனக்குள் கவிதைகள் அதற்கு முன்னமே ஊற்றெடுத்திருக்க வேண்டும். அப்படித்தான் நம்புகிறேன். ஏன் எனில் எனக்குள் கவிதை என்பதற்காக விதை எங்கிருந்து வந்தது. விதைத்தது யார் எனத் தெரியவில்லை. இன்றளவும் கேள்வி தான் எனக்கு அது. ஆனால் எனக்குள் பெருகும் அதை எனது அப்பா கண்டுபிடித்தார் .
காட்டுவழி விறகெடுக்கப் போகையில் காட்டு ஆரஞ்சுப் பழம் அப்பா பறித்து தந்தார். அதன் தொலியை அழுத்தி உரிக்கையில் சாரல் போல் தெரிந்தது தண்ணீர் . நான் அப்பாவிடம் "அப்பா ஆரஞ்சுப் பழத்தில மழை எப்படி ஒளிஞ்சிருக்கு" என்று கேட்டேன் மக்களே நீ என்ன கேட்ட என்று சொல்லி விட்டு சும்மாடு கத்தி எல்லாம் கீழே போட்டுவிட்டு அந்தக் காட்டுவழியில் என்னை தலைக்கு மேலே தூக்கி கணக்கற்ற முத்தமிட்டார். "நீ கவிதை சொல்லிவிட்டாய் . உனக்கு எழுத்துகளை காட்டவேண்டியது என் கடமை " என்றார்
அன்றிலிருந்து என் அப்பாவின் நாட்குறிப்புகள் எனது கவிதைக் கேள்விகளால் நிறப்பப்பட்டன . நான் சமதளத்திற்கு பயணிக்கும் வரை - நான் வாய்வழியாகச் சொல்வதெல்லாம் அப்பா எழுதி பத்திரப்படுத்தினார் . முதல் கவிதை தொகுப்பின் பின் பாதியில் சில பதிவாக்கப்பட்டன . அவற்றை பதிவாக்க வேண்டும் என விரும்பியது நான் மற்றுமொரு தந்தையாக ஏற்றுக்கொண்ட கவிஞர் அறிவுமதி அப்பா.
சினிமாவில்- திரையில் பெண், திரைக்குப் பின்னால் பெண் கசப்பான அனுபவங்கள் நிறைந்து கிடக்கிறது. அப்படி ஏதும் உங்களுக்கு இருக்கிறதா?
திரையில் காட்டப்படும் பெண் அலங்கரிக்கப்பட்ட கசப்பு. திரைக்குப் பின்னால் பெண் கொன்று புதைக்கப்பட்ட கசப்பு.
உங்களின் கவிதைகளில் தொடர்ந்து வருகிற தவிப்பின் குரலுக்கு யார் தான் சொந்தமானவர்கள் ?
கவிதையை கவிதையாக புரிந்து கொள்ளும் வல்லமை பெற்றவர்கள் அறிவார்கள்.
உங்கள் கவிதைகள் தமிழகத்தில் எழுதப்படும் பெண் கவிஞர்களின் கவிதைகளிலிருந்து உட்பொருள் தொடக்கம் சொல்லும் பாணி வரை தனித்துவதன்மை கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களிடமுள்ள தீவிரமும் ஓர்மமும் அரசியல் ரீதியாக உங்களிடம் தவறிவிடுகிறதே ?
மற்ற பெண்கவிஞர்களிடம் இருக்கும் தீவிரமும் ஓர்மமும் அரசியல் ரீதியாக உங்களிடம் தவறிவிடுகிறதே இந்தக் கேள்விக்கு ஒரு விரிவான பதிலை கவிதைகள் மேல் தீவிர அக்கறை கொண்ட நான் சொல்லியாகவேண்டும் . அதுவே எனது உட்பொருள் தொடக்கம் சொல்லும் பாணி வரை தனித்துவதன்மை கொண்டிருக்கிறக்கக் காரணமாகவும் இருக்கிறது.
உடல் மொழிக் கவிதைகள் அரசியல் கவிதைகள் பெண்ணியம் பெண் சுதந்திரம் பெண் விடுதலை ஜாதி ரீதியாக கவிதைகள்
இவற்றை தீவிர குரலாக பதிவு செய்ய வேண்டிய ஒரு காலகட்டம் இருந்தது நான் மறுக்கவில்லை. 1996 இல் இருந்து சிறுபத்திரிக்கை வழியாக எனது கவிதைகள் பிரசுரம் பெற்றன. அக்காலத்தில் இருந்தே என் மனச்சிந்தனை நடப்பு காலத்தை பற்றி மாத்திரம் அல்லாமல் எக்காலத்துக்குமான கவிதைகளைப் படைத்தல் பற்றியதாக இருந்தது.
மட்டுமல்ல உடல்மொழிக் கவிதைகளின் அரசியல் அவற்றை அப்பட்டமாக எழுத மனம் இடம் தரவில்லை என்பது உண்மை. ஒரு ஆபாசத் தன்மையற்று எதையும் படைத்தல் என்பது தான் கலைகளில் ஆகச்சிறந்த நுண்மை . இயற்கை இதைத் தான் போதிக்கிறது. பிரபஞ்சத்தில் "படைப்பு" என்பதை தேடலோடு பயணித்தால் எல்லாம் வெறுமையின் உட்கருவில் தனிமை பிரசவித்த அணுக்களில் இருந்து துவங்குகிறது. அப்படி எனில் வெறுமை வெளியில் மெளனங்களைப் உயிர்ப்பித்தல் படைத்தலாக இருக்கிறது. இதை உணர்ந்து கொண்ட நான் மெளனங்களைப் படைக்கவே போராடினேன் .தர்க்கம் எனக்குள்ளேயே தகர்க்கப்பட்டது.
மெளனம் வெளிப்படுத்தும் சலனம் எல்லா அரசியலையும் எதிர்கொள்ளப் போதுமான ஆயுதம் . எனது கண்ணில் எதுவும் நிர்வாணமாக இல்லை. மரங்களுக்கு அதன் பட்டைகள் தான் ஆடைகள் என என் மனம் சொல்லுகிறது . இன்னும் கூட சற்று விரிவுபடுத்திச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் சிற்பக்கலையை கூர்ந்து கவனித்தோமானால் அதில் வடிக்கப்பட்டிக்கும் காமம் உலகச் சிற்பக் கலையின் உச்சம். சிலைகள் வார்த்தையற்றது ஆதலால் காணும் கண்கள் அதனை மிகச் சாதாரணமாக கடந்து விடுகின்றன . கலைகளில் நுணுக்கம் மிக்கவனும் ஆர்வம் கொண்டவனும் சிலைமொழி வழியாக அது சொல்லாத வார்த்தைகளோடு உறவாடிக் கொள்கிறான். இங்கே மெளனம் கலையாகிறது. ஆனால் ஒரு கவிஞனுக்கு மொழியே படைப்பின் ஆயுதம். சொல்லை வைத்து உணர்வுகளை உயிர்பிக்க வேண்டிய நெருக்கடி அதனால் அதைக் கையாள்வது மிகக் கடினமான சவால்.
இப்படி இருக்க அதிர்ச்சி அளிக்கும் உடல்மொழிக் கவிதைகள் எனக்கு உடன்பாடு இல்லைவே இல்லை . அதனை ஒரு சிலையின் மெளன இயல்பில் சருகின் நித்திய மாயையில் கடத்த முயற்சித்தேன். இந்த இடத்தில் தான் எல்லா உடல்மொழிக் கவிதைகளையும் அரசியலையும் ஆண் ஆதிக்க வக்கிரங்களையும் இரகசியமாக மெளனத்தில் மிதக்க விடுவதை படைப்பாக கண்டடைந்தேன்.
"எனது மனம் இரகசியமாய் பிடுங்கப்பட்டு ஒரு ரோஜா இதழைப் போல் உண்ணப்பட்டது" இந்த வரிகளுக்குள் சிதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடலை மனதை வாழ்வை நீங்கள் காணாமல் இருக்க முடியாது . ஆனால் அதைச் சொல்ல நான் அதிர்ச்சி தரும் எவ்வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை .
அதே போல் ஒரு உன்னத கவிதை வெளிப்படையாக அரசியலை உடலை காமத்தை சொல்வது அல்ல . எழுதப்பட்ட வார்த்தைக்குள் எழுதப்படாத உணர்வை ஒளித்து வைத்து வாசகனின் ஆழ்மனதோடு உயிரைத் தரிசிக்கத் செய்வது.
நீங்கள் ஆபாசமானதை எழுதவேண்டாம் என எண்ணம் கொண்டிருப்பதாக சொல்லுகிறீர்கள். உடலரசியல் கவிதைகள் ஆபாசமானவையா என்ன?
ஆபாசமானவைகளை எழுத எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை . பொதுவாக
உடலரசியல் கவிதைகள் ஆபாசமானவை அல்ல.
நமது இலக்கிய சூழலில் ஆபாசமற்ற உடல் அரசியல் கவிதைகள் சில இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஆபாசமாக எழுதக்கூடாது என்பதில் எனக்கு உறுதி இருக்கிறது.
உங்கள் கவிதைகள் அதிக கவனம் பெறவில்லை என்கிற கவலை உங்களுக்கில்லையா?
இல்லை . காரணம் புறக்கணித்து ஒதுக்குவதால் கவிதைகள் மேல் நான் கொண்டுள்ள அன்பு மென்மேலும் வலுவடைகிறது. மனிதர்களை நம்பாமல் கவிதைகளையே நம்புவதால் எனது உண்மையும் எளிமையும் தனக்கான பாதையில் தனக்கான வெளிச்சத்தில் காட்சி தரும் . இயற்கையாக எதைப் புறக்கணிக்கிறோமோ அதுவே வலிமை பெற்றதாகும் . நிராகரிக்கப்படுகிறவைகள் தோற்றுப் போன வரலாறு எங்கும் இல்லை
மேலும் இலக்கியச் சூழல் என்பது சூனியக்காரர்களின் கைத்தடியைப் போல அதிர்ச்சி தருகிறது. உண்மையில் உள்ளார்ந்த கலை ஆர்வம், அர்ப்பணிப்பு , தேடல் உள்ளவர்கள் மிகக் குறைவு என்றே உணர்கிறேன். திரைப்பட துறைக்கும் இலக்கிய உலகுக்கும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன.
அங்கே உண்மை கலைஞர்களை பொதுமக்கள் வெகுவாக புரிந்து கொள்கிறார்கள் சிறந்த படைப்பாளிக்கான கவனம் அங்கீகாரம் என்பது நிச்சயம் . இலக்கியத்தில் உண்மையாக இயங்குபவர்களை விட போலியான பிரதிகளுக்கான கவனம் விரைவாகக் கிடைக்கிறது. அல்லது உருவாக்கி கொள்கிறார்கள் . நடிக்கிறார்கள்.நமக்கு இங்கே சரியான மதிப்பீட்டாளர்கள் சீரிய விமர்சனங்கள் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவை . இவர்கள் யாதொரு குழு அரசியலிலும் பத்திரிகை அரசியலிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
1996 முதல் பிரசுரமான கவிதைகள் 2001 ல் முதல் தொகுப்பு வெளிவரும் முன்னமே மிகுந்த கவனம் பெற்றது. அதிகமாக சுஜாதா அவர்கள் என்னிடம் விரும்பி கவிதைகள் பெற்று மின்னம்பலம் இணைய இதழில் பிரசுரித்தார் . பின்னர் 2001 ல் வெளியான முதல் தொகுப்பிற்கு அபாரமான வரவேற்பு. முதல் தொகுப்பு 3 விருதுகள் பெற்றது.
ஆனால் அதன் பின்னர் நான் திரைப்படத்துறையில் அதிக வேலைப்பளுவில் சிக்கினேன் . அங்கும் எனது எழுத்து அதிகம் ஆனாலும் கவிதைகள் என்னை விடுவதாய் இல்லை. நான் மேலும் தீவிரமாக எனது மொழியின் தீவிரத்தை செதுக்கத் துவங்கினேன் பெரும்பாலான கவிதைகள் இரவு நேரங்களில் எழுதுவேன். அல்லது இரவு முழுவதும் எழுதிக்கொண்டேயிருப்பேன் . இப்படி விடாமுயற்சி என் கவிதையின் வடிவங்களில் நேர்த்தியையும் செறிவையும் கூட்டித் தந்தன. ஒளியறியாக் காட்டுக்குள் தொகுப்பில் திணையின் பெரும் பாய்ச்சலை பல அநேக புதிய உத்திகளை வித்தியாசமான புதிய வடிவ முயற்சிகளைத் செய்தேன். அதன் பின்னர் நிராசைகளின் ஆதித்தாய் ஆகப்பெரும் வித்தியாசமான கவிதை முயற்சி அத்தனையும் ஆழ்மனக் கவிதைகள் .
இக்கவிதைகளை கவனிக்க காலம் ஆனது என்று சொல்ல முடியாது. தொடர்து அத்தனை இலக்கிய பெண்வெளி அவதானிப்பு பற்றிய கட்டுரைகளிலும் கவனமாக என் பெயர் துண்டிக்கப்பட்டது. அல்லது பேசப்படவில்லை. இதற்கு காரணம் எனது கவிதைகள் உடல்மொழி பெண்ணியம்,பெண்விடுதலை எனப்பேசாமல் பால் பாகுபாடு பிரித்தறிய இயலா பொதுவெளியில் நிலத்தையும் இயற்கையையும் பேசியது. இவைகளை ஏற்றுக் கொள்ள கால தாமதம் ஏற்படலாம். ஆனால் எக்காலத்திலும் எனது கவிதைகள் காலாவதியாகாது . இனிவரும் காலங்களில் எனது கவிதைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால் இலக்கியத்தில் ஏன் எனது கவிதைகள் புறக்கணிப்புக்கு உள்ளானது என்ற அரசியலை புரிந்து கொள்ளலாம் .
தமிழுக்கு இணையாக வேறு மொழி இல்லை எனில் நமது மொழியின் அசாத்திய குரலை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் நமது. இதன் உள்ளே நாம் பேசவேண்டியது கவிதையே .எனது கவிதைகளை இனியும் இலக்கிய சூழல் நிராகரித்தால் இழப்பு எனக்கு அல்ல.
பொதுவான வடிவ பாணியில் இருந்து பெரிய வித்தியாசத்தில் எனது கவிதைகள் இயங்குவது ஒரு காரணமாக இருக்கும். வீரியம் கொண்ட எதுவும் வீழாது வாழும்.
உங்களைக் கவிக்கடவுள் என எழுத்தாளர் சாரு நிவேதிதா வியந்து பாராட்டினாரே,அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
ஒரு மூத்த நல்ல எழுத்தாளரின் பாராட்டு மகிழ்ச்சி அளித்தது . அதற்கு மரியாதையும் நன்றியும் நினைத்துக் கொண்டேன் . பாராட்டுகள் எப்போதும் உத்வேகத்தையும், நல்விமர்சனம் மற்றும் எதிர் விமர்சனமும் கூட வளர்ச்சிக்கு வழியை வகுத்து தரும் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.
தமிழ்கவிதைகளில் நிலம் பற்றிய பிரக்ஞை அதிகம் உங்கள் கவிதைகளில் தானிருக்கிறதென எண்ணுகிறேன்.நீங்கள் நிலத்தின் அத்தனை அற்புதங்களையும் எவ்வாறு தரிசிக்கிறீர்கள்?
ஊற்றின் கண் ஊற்று அறியாது .ஆயினும் இக்கேள்விக்கான பதில் நீட்சிமிக்கது. எனது பால்ய காலம் மலைவாசஸ்தலம் ஆகையால் மலையும் மலை சார்ந்த நிலமும். காடும் காடு சார்ந்த அனைத்தும் என் எழுத்தின் அஸ்திவாரங்கள் ஆகின . நான் கண்டும் கேட்டும் தேடியும் பழகிய காடு என் உறக்கத்தையும் தகர்க்கத் துவங்கியது . அம்மலைப்பிரதேசம் அதன் வெள்ளந்தி மன மக்கள் தான் இன்னும் என் அழியாச் சொத்து. அம் மலைகளுக்குள் யாதொரு கடையோ கடைத்தெருவோ சினிமா கூடமோ சந்தை சண்டை சச்சரவுகளோ எதுவுமற்ற இயற்கையின் பேரெழில் பெரும் பரப்பில் நான் கண்ட ஈரங்களை பூக்களை மிருகங்களை தாவரங்களை என அனைத்தும் நான் நேசிக்கத்துவங்கினேன் .
எனது மரணமே நிகழக்கூடாது "ஏதேனும் ஒரு மரங்களின் சதைக்குள் விரலையும் மனதையும் ஒளித்து வைக்க முடியும் எனில் நலமாயிருக்கும்" என எழுதியதன் காரணம் இவ் இயற்கையை எழுதித்தீர்க்க முடியாத அவஸ்தையில் தான்.
யாரேனும் எனது பிறந்த ஊர் பற்றிக் கேட்டால் முகவரி சொன்னாலும் புரியாத இந்திய தேசத்தில் எனது நாட்டின் ஒரு கடைக்கோடி மலை உச்சியில் ஒரு ஊற்று போல் கிடக்கும் நான் பிறந்த மண். இதன் எழில் என்னை வெகுவாய் புரட்டி எடுத்தது. மேகமலை என்றே பெயர் வரக் காரணமாய் மேகங்கள் நடக்கும் அதிசய நிலத்தை நான் பதிவு செய்யாமல் எப்படி மறைவது.
25 வயது வரை கடலும் சமவெளி வாழ்வும் அறியாத எனக்கு குறிஞ்சியும் முல்லையும் முழுதாய் சிலாகித்து எழுத வாய்த்தது . ஆனால் யாதொரு பாசாங்குமின்றி தமிழின் உச்ச இசைத் தன்மையில் யாதொரு அந்நிய மொழியின் வடிவத் தாக்கமின்றி எனது மொழியை எழுத வேண்டும் என்பது எனது தாகமும் தீர்க்கமும் ஆகும்.
நமது நிலம் பற்றியும் அதில் வாழும் மனித மனங்களின் வேதனைகள் பற்றியும் எழுத எனக்கு உள்ளார்ந்த பிரியம் உண்டு. நானாய் தேடிச்செல்வது இயற்கையின் ஊடே மொழியைத் தான்.
நீருக்கு மணமும் நிழலும் கிடையாது என ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் மைக்கேல் மாமா சொன்னார். ஒரு நாள் காட்டுவழி செல்லும் போது மெல்லிய நீரோடை கூழாங்கற்களின் தெளிவின் மேல் ஓடிக்கொண்டிருந்தது .அதனடியில் திருகித் திருகி ஓடை ஓடும் போது நீரின் நிழலை நான் கண்டேன். பரவசம் தாங்க முடியவில்லை. மலைவெளிகளில் நான் இயற்கையின் அதிசயங்கள் கண் மகிழ்ந்து உருண்டது உண்டு.
அப்படி ஒரு நாள்
"நீருக்கும் நிழலுண்டு என்பது
சிற்றோடை பேசிப்போகையில் தான் தெரிந்தது"
என மிகச் சிறிய வயதில் சொன்னேன்.
இப்படி எனக்குள் எல்லையற்ற காட்சிப்படிமங்களை விதைத்தது காடுகள் தான். இதுவரை யாதொரு இலக்கிய தீவிர வாசிப்பும் இல்லாத எனக்கு இம்மலைவாழ்வு தான் பேரகராதியாய் இருக்கிறது. அதனை எனது மொழியில் எழுதுகிறேன்
உங்களின் பால்யகாலத்தின் நினைவுகளில் மறக்கமுடியாத தருணங்கள்?
அதிகமாய் இருக்கின்றன . எனது மூளை ஒரு அசாத்திய தன்மை கொண்டது எளிதில் எதையும் மறக்காமல் காட்சிப்படுத்தும் அது . பால்ய காலம் பற்றி கதையாக எழுத விருப்பம் உள்ளது
திரைப்படவுலகில் பெண்ணுக்கு நிறைய சவால்கள். உங்களுக்கு திரைப்படம் ஏதேனும் திட்டம் உள்ளதா?
●
திரைப்படம் கட்டாயம் நான் இயக்குவேன். அதற்கான காலம் கொஞ்சம் தூரத்தில் உள்ளது. ஆனால் கவிதை தான் அதைவிடச் சிறந்த கலை. இயக்க இயலாத காட்சிகளை கவிதைகளில் காட்சிப்படுத்தும் சாத்தியம் அதிகம் இருக்கையில் கவிதைகள் ஒரு உத்வேகத்தை எப்போதும் தருகின்றன. ஒரு முழுத் திரைக்கதையையும் அநேக சிறுகதைகளையும் நாவலையும் கவிதைக்குள் அடைத்துவிடம் சாத்தியம் இருக்கையில் கவிதை எழுதுதல் படைப்பின் திருப்தி இயற்றுதல் கலையில் சிறந்தது எனில் கவிதை இயற்றுதல் கலைகள் அத்தனைக்கும் மூலாதாரம்.
எனது பாத்திரம் வெறுமையோடே இருக்கிறது . நிறைக்கவும் நிறையவும்
வாழ்வு முழுமையும் கவிதைகள் போதுமானது. பூச்சக்கரத்தின் மேலும் கீழும் காண்பதையும் காணயியலாததையும் சொல்லினால் கண்டடைய முடிகிற போது உயிருக்குள் மொழி தான் முதல் கலை. அதை விட்டு நான் ஏன் கீழிறங்க வேண்டும்.
நேர்காணல் - அகரமுதல்வன்
நன்றேது? தீதேது? தொகுப்பிலிருந்து